திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி ஊராட்சி 4வது வார்டு உறுப்பினர் முனியாண்டி (55). இவரும், அதேப் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் (48) என்பவரும் நேற்று மதியம் தச்சன்குறிச்சி மதுபான கடையில் மது வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து உறவினர்கள் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதன் பிறகு இருவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சிவகுமார் உயிரிழந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முனியாண்டி என்பவரும் உயிரிழந்தார்.
தகவலறிந்து திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த இருவரின் சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறையில் மது குடித்து 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுகுறித்த விசாரணையில் மதுவில் சயனைடு கலந்து இருந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் திருச்சியில் 2 பேர் மது குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- ஷானு