தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே முகமது பந்தர் ரஹீம் நகரை சேர்ந்தவர் முகமது காசிம். இவர், முகமது பந்தர் ஜமாத் தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு, நேற்று முன்தினம் மதியம் கொரியரில் பார்சல் ஒன்று வந்துள்ளது.
அந்த பார்சலை பிரித்துப் பார்த்தபோது மண்டை ஓடு இருப்பதை கண்டு முகமது காசிம் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் திருவையாறு டி.எஸ்.பி ராஜ்மோகன் தலைமையில் போலீசார் வந்து மண்டை ஓட்டை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அந்த பார்சலில் அனுப்புனர் முகவரியில் ‘நவ்பாய் கான்’ என பாதி ஆங்கிலம், தமிழ் கலந்து இருந்துள்ளது. பார்சல் கவரில் இருந்த செல்போன் எண் மூலம் ஆய்வு செய்து இதுதொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் அப்துல்லா மற்றும் முகம்மது முபின் ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில் முகம்மது பந்தர் ஜமாத்தின் தலைவராக முகம்மது காசிம் தொடர்ந்து பல ஆண்டுகளாக இருந்து வருவது பிடிக்காததாலும், தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர் இறந்துவிட்டால் அவர்களை அடக்கம் செய்ய இடம் தராமல் அவமானப்படுத்தி வந்ததாலும் அவரை மிரட்டும் நோக்கத்தில் பார்சல் அனுப்பியது தெரிந்தது.
இதற்காக தஞ்சை வடவாறு அருகில் உள்ள ராஜா கோரி சுடுகாட்டில் இருந்து 3 மனித மண்டை ஓடுகள் எடுத்து அதன் மீது மஞ்சள் தடவி, குங்குமம் இட்டு மாந்த்ரீகம் செய்து ஒரு சிறிய பொம்மையையும் வைத்து பார்சல் செய்து பாபநாசத்தில் உள்ள கொரியர் அலுவலகம் மூலம் முகம்மது காசிம் உள்பட 3 பேருக்கு அனுப்பியதும் தெரியவந்தது. இதை அடுத்து இரண்டு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.