திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி, நேதாஜி நகர் 18வது வார்டில் தனியாருக்குச் சொந்தமான இம்மானுவேல் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் இன்று பிற்பகல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிகள் நடந்துள்ளது.
இதற்காக மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தில் பணிபுரிந்து வரும் நிரந்தர துப்புரவு பணியாளரான பட்டலால் பகதூர் தெருவில் வசிக்கும் கோவிந்தன் (45) மற்றும் தற்காலிக பணியாளரான சுப்புராயலு (45) ஆகிய 2 பேரும் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விஷ வாயு தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இதுகுறித்து மீஞ்சூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தகவல் அறிந்து ஆவடி காவல்துறை ஆணையரக இணை ஆணையர் விஜயகுமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக, சம்பவத்துக்கு காரணமான பள்ளி தாளாளரான சிமியோன் விக்டர் என்பவரை மீஞ்சூர் போலீசார் கைது செய்து, தற்போது மீஞ்சூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணையின்போது மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் தனது பள்ளிக்கு வந்து தொழிலாளர்கள் 2 பேர் துப்புரவு பணி மேற்கொண்டதாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் இன்று விடுமுறை நாள் என்பதாலும், தொழிலாளர் தினம் என்பதாலும் எந்த ஒரு துப்புரவு பணியாளரையும் தாங்கள் பணிக்கு நியமிக்கவில்லை என கூறுகின்றனர்.
உழைப்பாளர் தினமான இன்று விஷ வாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் மரணமடைந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.