தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியில் பிரசித்திப் பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில், ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மாரியம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்தவகையில், மாரியம்மன் கோவில் திருவிழா இன்று பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் பக்தர்களின் மகிழ்ச்சியை சீர்குலைக்கும் வகையில் அரங்கேறி இருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது கோயில் திருவிழாவுக்கு தேவையான பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு வாகனம் வந்துள்ளது. அப்போது பட்டாசு ஏற்றி வந்த வாகனத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக தீப்பொறி பட்டதில் வாகனத்தில் இருந்த மொத்த பட்டாசுகளும் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதைப் பார்த்த கிராம மக்களும், கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களும் கவலையில் ஆழ்ந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்தபோது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பட்டாசு ஏற்றி வந்த வாகனத்திற்கு அருகிலேயே பட்டாசு கொளுத்தியதால் இந்த சம்பவம் நடந்ததும், இறந்தவர்கள் பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
ஆனாலும் இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் திருவிழாவில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கோபிகா ஸ்ரீ