திருவண்ணாமலையில் உள்ள பிரசித்திப் பெற்ற அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாவட்டம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு வரும் பக்தர்களுக்கு மூலவர் மற்றும் அம்மன் கருவறைகளில் விபூதி, குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதில் தீபாராதனை தட்டில் பணம் போடும் பக்தர்களுக்கு கவரில் நிரப்பப்பட்ட விபூதி பிரசாதத்தை சிவாச்சாரியார்கள் வழங்குவது வழக்கம்.
இதற்காக விபூதியை நிரப்ப தேவையான கவர்களை ஆன்மிக அன்பர்களே அச்சடித்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் கிறிஸ்துவ மத அடையாளத்துடன் அச்சிடப்பட்ட கவரில் பக்தர்களுக்கு விபூதி, குங்கும பிரசாதத்தை சிவாச்சாரியார்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். இதன் எதிரொலியாக 2 சிவாச்சாரியார்கள் மீது கோயில் இணை ஆணையர் குமரேசன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முறை அர்ச்சகர் கே.சோமநாத குருக்கள், ஸ்தானீகமாக பணியாற்றும் ஏ.முத்துகுமாரசாமி குருக்கள் ஆகியோர் இந்து சமய அறநிலையத் துறை உயர் அலுவலர்களின் உத்தரவு பெறாமல் நிர்வாகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய விபூதி, குங்கும பிரசாத கவர்களை திருக்கோயில் நிர்வாகம் அனுமதி பெறாமல் பக்தர்களுக்கு வழங்கி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருக்கோயிலுக்கு அவப்பெயர் மற்றும் துறைக்கு களங்கும் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் 2 குருக்களையும் 6 மாத காலத்துக்கு பணியிடை நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.