ராணிப்பேட்டை: பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 சிறுமிகள் உயிரிழப்பு - பெற்றோர்கள் கண்முன் நிகழ்ந்த சோகம்

பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 சிறுமிகள் பெற்றோர்கள் கண்முன் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளத்தில் கவிழ்ந்த கார்
பள்ளத்தில் கவிழ்ந்த கார்

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சலீம். இவரது மகள் தமசுல் பாத்திமா (15). சலீமின் உறவினர் அப்துல் ரசாக். இவர், சென்னை கோட்டூரில் வசித்து வருகிறார். இவரது மகள் சுமையா பாத்திமா (17).

இந்த 2 குடும்பத்தை சேர்ந்த 13 பேர் ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் வஜ்ரகரூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு துக்கம் அனுசரிக்க இரண்டு கார்களில் சென்றுள்ளனர்.

ஆந்திராவில் துக்க நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் நேற்று காலை சென்னைக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். இதில் ஒரு காரை சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த டிரைவர் விஜய் (32) என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பெல் தொழிற்சாலை எதிரில் பைபாஸ் சாலையில், கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறியதால் கட்டுப்படுத்த முடியாமல் டிரைவர் விஜய் தவித்துள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் கார் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுமிகளான தமசுல் பாத்திமா, சுமையா இருவரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், டிரைவர் உள்பட 4 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

இவர்களது அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சிப்காட் போலீசார் வந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சாலை விபத்தில் பெற்றோர் கண்முன்னே 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com