அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கடம்பூர் ராஜூ கூறுகையில், "உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை இபிஎஸ் தலைமையிலான அதிமுக தான் உண்மையான அதிமுக என்று தெரிந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்பதை ஏற்றுக் கொள்பவர்கள் தான் உண்மையான அதிமுகவினர். ஓபிஎஸ் இனிமேல் புதிய கட்சி ஆரம்பித்தாலும், எதாவது தொழில் செய்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. அதிமுக பெயரை வேறு யாரும் இனிமேல் பயன்படுத்த முடியாது.
சட்டமன்ற தேர்தல் நேரத்தின் போது கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தவர் தான் ஓபிஎஸ். அன்று அவர்களுக்குள் இருந்த கள்ள உறவு இப்போது வெளிவந்து நல்ல உறவாக மாறியுள்ளது.
மதுரை மாநாட்டிற்கு பிறகு ஓபிஎஸ் கூடாரமே காலியாகி வருகிறது. ஓபிஎஸ் இடமிருந்த ஒரு சில தொண்டர்களும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். மதுரை எழுச்சி மாநாட்டிற்கு பிறகு தமிழகத்தில் முதன்மையான இயக்கமாக அதிமுக மாறிவிட்டது.
அதிமுகவிற்கும், மதுரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கட்சி தொடங்கிய காலம் முதல் இன்று வரை புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா இருவர் இருந்த காலத்திலும் விழா, மாநாடு என்றால் மதுரையை தேர்வு செய்து வெற்றி பெற்று உள்ளோம். மதுரை மாநாட்டிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தேசிய அளவில் தலைவராக உயர்ந்து உள்ளார்.
விடியல் தருவேன் என்று கூறி விடியாத ஆட்சியை தந்த திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் மூன்று மதத்தினரும் சேர்ந்து "புரட்சித் தமிழர்" என்ற பட்டத்தை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கியுள்ளனர். அதனை அதிமுக தொண்டர்கள் முழு மனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஓபிஎஸ் கூடாரம் காலியாகிவிட்டது போல திமுக கூடாரமும் காலியாகி கொண்டிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நகர மன்ற தலைவர் அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறார். இரண்டு திமுக எம்எல்ஏக்கள் இரண்டு பேர் விடியா அரசை எதிர்த்து தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைவார்கள். அந்த நிகழ்வு நடக்கும் போது ஒட்டு மொத்த திமுக கூடாரமும் காலியாகும், கலகலப்பு போகும்" என்று புதுக்குண்டை தூக்கி வீசினார் கடம்பூர் ராஜு.