செங்கல்சூளை குட்டையில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு- குளிக்க சென்ற போது விபரீதம்

அனுமதி இல்லாமல் செங்கள் சூளையில் 30 அடி ஆழத்திற்கு குழி தோண்டி உள்ளனர் என உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
உயிரிழந்த சிறுவர்கள்
உயிரிழந்த சிறுவர்கள்

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டிணத்தையடுத்த ஆச்சாங்குட்டப்பட்டி செங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி -புஷ்பா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் வசந்தகுமார் 6ம் வகுப்பும், இரண்டாவது மகன் ஸ்ரீதர் 3ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அங்கு உள்ள செங்கல் சூளையில் அமைக்கப்பட்டிருந்த குட்டையில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது நிலைதடுமாறி தம்பி ஸ்ரீதரன் தண்ணீரில் மூழ்கியதை கண்ட அண்ணன் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.

இந்த முயற்சியின் காரணமாக பரிதாபமாக இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் அஙு வந்து குட்டையில் மூழ்கிய இரண்டு மாணவர்கள் உடலையும் மீட்டனர். தகவல் அறிந்த போலீசார் அந்த பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவம் நடந்த செங்கல் சூளை அதே பகுதியில் உள்ள பருத்திக்காடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு சொந்தமானது என்றும் அனுமதி இல்லாமல் 30 அடி ஆழத்திற்கு குழி தோண்டி உள்ளனர் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

செங்கல் சூளை உரிமையாளர் தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பெற்றோர் குழந்தைகளின் உடல்களைப் பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதில் சமரசம் ஏர்பட்டது

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com