மதுரையில் மட்டும் மக்களவைத் தேர்தலை வேறு தேதிக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கு: தமிழகம் முழுவதும் ஏன் தேர்தல் தேதியை மாற்றக் கூடாது என மதுரை கிளை கேள்வி.
மதுரையில் மட்டும் மக்களவைத் தேர்தலை வேறு தேதிக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழகம் முழுவதும் ஏன் தேர்தல் தேதியை மாற்றக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையில் சித்திரைத் திருவிழா, வரும் ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்குகிறது. 16ஆம் தேதி அம்மன் திக் விஜயம், 17ஆம் தேதி திருக்கல்யாணம், 18ஆம் தேதி தேரோட்டம் மற்றும் கள்ளழகருக்கு எதிர் சேவை, 19ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
எனவே, மதுரையில் மட்டும் மக்களவைத் தேர்தலை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் முடிந்தவுடன் பாதுகாப்பு இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்லவேண்டும் என்றார். தேர்தல் நேரத்தை இரண்டு மணி நேரம் அதிகப்படுத்த முடியும் என்றும், மதுரைக்கு மட்டும் தேர்தல் தேதியை மாற்றி அமைக்க முடியாது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மதுரை சித்திரைத் திருவிழாவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்று தெரிவித்தனர். மேலும், தமிழகம் முழுவதும் ஏன் தேர்தல் தேதியை மாற்றக் கூடாது? என்றும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். இதுதொடர்பாக, நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.