பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கி இருப்பதாக தகவல்
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் நியாயம் கிடைக்காது என்று அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து ஐ.ஜி. ஸ்ரீதர், பெண் போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோரது தலைமையிலான போலீசார் நேற்று பொள்ளாச்சிக்கு சென்று அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர். பாலியல் சம்பவம் நடைபெற்றதாக புகார் கூறப்பட்டுள்ள வீட்டுக்கு சென்றும் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதற்கு தமிழக அரசும் சம்மதித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தது. இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.