நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த வண்டலூர் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (45). மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக இவரது கூரை வீட்டில் திடீரென தீப்பிடித்தது.
அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவி வண்டலூர் மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த தமிழரசி (50), வெங்கடேசன்(25), பாப்பையன் (65), ராஜேந்திரன் (65), ராஜேஷ் கண்ணா (22), மதீஷ் ராஜ் (23), சுப்பிரமணியன் (50), அரவிந்த் (28), பெரியசாமி, ராகுல் (21) ஆகியோரது கூரை வீடுகளுக்கும் பரவியது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் அவர்களால் அணைக்க முடியவில்லை.
இதையடுத்து உடனடியாக நாகை, கீழ்வேளூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு ஆகிய 4 இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து தீயணைப்பு நிலையங்களில் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் தீ விபத்தில் 11 கூரை வீடுகள் முழுமையாக எரிந்து சாம்பலானது. மேலும் இந்த 11 வீடுகளில் இருந்த பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் இந்த விபத்தில் ஒரு ஆடு உயிரிழந்த நிலையில் மொத்த சேதம் பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நாகப்பட்டினம் போலீஸ் எஸ்.பி சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். மேலும், அமைச்சர் ரகுபதி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவி வழங்கினர்.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக 11 கூரை வீடுகள் எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.