கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேசுகையில், வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என்பதால், தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றார். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், அந்த மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறினார். நேற்று இந்த 4 மாவட்டங்களில் மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேலும், சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் அவர் கூறினார்.
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசும் என்பதால், நாளை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். இன்று காலை 8 மணி வரையிலான கணக்கெடுப்பின்படி, அதிகபட்சமாக பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் 18 செ.மீட்டரும், ராமேஸ்வரம், தங்கச்சிமடம் ஆகிய பகுதியில் தலா 17 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக பாலச்சந்திரன் கூறினார்.