சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை!
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், கனமழை காரணமாக, ராமநாதபுரம், சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமேஸ்வரம், கோவை, நீலகிரி, கொடைக்கானல் என உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்த நிலையில், இன்று அதிகாலை வரை விடிய விடிய பெய்தது. இதேபோல், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், மயிலாப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். இதேபோல், கன மழை காரணமாக, ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியராக வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், கனமழை காரணமாக, காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.