நூறுநாள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்களை இழிவாக பேசிய வழக்கில் புரட்சி பாரதம் கட்சியை சார்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் நூறு நாள் பணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் செல்லியம்மன் கோவில் அருகே பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த இடத்திற்கு வந்த புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த பிரபா என்பவர் வேலை செய்துக்கொண்டிருந்த பெண்களிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி, தகாத முறையில் நடந்துக்கொள்ள முயன்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் அவனை பிடிக்க முயன்ற போது அவ்விடத்திலிருந்து தப்பி ஒடியுள்ளார்
அதனைத் தொடர்ந்து பிரபா என்பவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தை தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் நூறு நாட்கள் வேலையில் பணியாற்றும் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
புகார் அளிக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என ஆத்திரமடைந்த பெண்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அவர்களிடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பிறகு சாலை மறியலை பெண்கள் கைவிட்டனர்.
பெண்களை ஆபாசமாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் பிரபாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.