திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் அந்த கிராமத்தை சேர்ந்த சேர்ந்த மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பணியில் ஈடுபட்டு வரும் பெண் தொழிலாளர்களை ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தங்களது நிலங்களில் கேழ்வரகு அறுவடை செய்தல், களை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக கூலி வழங்காமல் அலைக்கழித்து வருவதாகவும், இதுகுறித்து முறையிட தங்களுக்கான பணித்தள பொறுப்பாளர்கள் யார்? என்றே தெரியாமல் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து தங்களுக்கு கூலி வழங்காமல் அலைக்கழித்து வருவதற்கான காரணம் என்ன? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் வலியுறுத்தி வந்தபோதிலும் எந்த நட்வடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் வாணியம்பாடியில் இருந்து வெலதிகாமினி பெண்டா, திம்மாம்பேட்டை மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தும்பேரி கூட்டு சாலையில் அமர்ந்து அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறைப் பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பலூர் போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.