காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த அவளூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலை நெய்குப்பம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு முறையாக வழங்கப்படாமல் இருந்து வந்தாக சொல்லப்படுகிறது.
மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டதாகவும், நடப்பு மாதமான மே மாதத்தில் இதுவரை ஒருநாள் கூட வேலை வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே நெய்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த நெய்குப்பம் பகுதியை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட நூறு நாள் நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் தங்களுக்கு முறையாக வேலை வழங்கப்படவில்லை என கூறி, அவளூர் கூட்டு சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்து வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உரிய நடவடிக்கையை உடனே எடுப்பதாக ஊராட்சி நிர்வாகம் உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து, கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.