இலங்கையில் நெருக்கடியான சூழல் நிலவி வருகிறது. அங்கு வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களான மின்சாரம், எரிபொருள், மருத்துவம், கல்வி ஆகியவற்றை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக அங்குள்ள ஈழத் தமிழர்கள் வாழ வழி இன்றி அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்து வருவது நாளுக்குநாள் அதிகரித்தபடி இருக்கிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டுப்பகுதியில் ஒரு கைக்குழந்தையுடன் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் படகில் வந்து தஞ்சம் அடைந்தனர்.
இதனை அடுத்து அவர்களை மரைன் போலீசார் மீட்டு மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவர்களை அகதிகள் மறுவாழ்வு முகாமில் போலீசார் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று நள்ளிரவு 2 மணிக்கு மணல் திட்டுப் பகுதியில் 8 மாத கைக் குழந்தையுடன் அகதிகளாக வந்து பசியும், பட்டினியுமாக கிடந்தவர்களை மரைன் போலீசார் மீட்டு, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.