மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச்சேர்ந்த 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பாவதோடு, விவசாயமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது; எங்களுக்கு தடுப்பணை கட்டிக்கொடுங்கள் என பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதை கண்டுகொள்ளாத அரசு அடுத்தடுத்து புதிய மணல் குவாரிகளை மட்டும் திறக்க உத்திரவிட்டுள்ளது அந்தப் பகுதி மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.
இது குறித்து கொள்ளிடம் பகுதி சமூக ஆர்வலர் பிரபு, "ஏற்கனவே கொள்ளிடம் ஆற்றை மணல் குவாரிகளால் அரசு கூறு போட்டு ஒட்டுமொத்த மணலையும் அள்ளிவிட்டார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக 10 மணல் குவாரிகளை திறந்தார்கள். அதன்பிறகு தற்போது புதிதாக 10 மணல் குவாரிகளை திறக்க அரசு உத்திரவிட்டுள்ளது எங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியாக உள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் மட்டும் அடுத்தடுத்த 10 கி.மீ. தூரத்திற்குள் ஒரு மணல் குவாரி என்று மொத்தம் 35 மணல் குவாரிகள் செயல்பட ஆரம்பித்தால் நிலத்தடி நீர் மொத்தமும் பாழாகி இது மயான பூமியாகிவிடும். மணல் எடுப்பதற்காகவே காவிரி ஆற்றில் பாசனத்திற்காக திறக்க வேண்டிய நீரை கொள்ளிடம் ஆற்றில் திறந்து பல லட்சம் கன அடி நீர் வீணாக கடலில் கலக்கச் செய்கின்றனர்.
ஓடி வரும் நீர் ஏராளமான மணலையும் இழுத்து வந்து குவித்து விடுவதால் மணல் குவாரிக்காகவே கொள்ளிடம் ஆற்றில் நீர் திறக்கப்படுகிறது. அதே சமயம் கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உட்புகுவதால் இந்த பகுதியில் ஒட்டுமொத்த விவசாயமும் பாதிக்கப்படுவதோடு, குடிநீருக்கே அல்லாடும் நிலையும் ஏற்பட்டுவிட்டது.
இந்நிலையில் மீண்டும் 10 மணல் குவாரிகளை திறக்க அரசு உத்திரவிட்டுள்ளது என்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல் உள்ளது. மதுக்கடையில் மிகப்பெரிய வருமானத்தை பார்ப்பது மணல் குவாரிகளாலும் அரசுக்கு பெரிய அளவு வருவாய் இருப்பதால் மக்களைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து கொள்ளிடம் மக்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவும் தயாராகி வருகின்றனர்" என்றார் ஆக்ரோஷத்துடன்.
இந்நிலையில் பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், "கொள்ளிடத்தில் ஏற்கனவே 25 மணல் குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில் மேலும் 10 மணல் குவாரிகளை திறக்க அரசு முடிவு செய்திருப்பது மிகவும் அதிர்ச்சிக்குரிய தகவலாக உள்ளது. மொத்தம் 87 கி.மீ. தூரத்திற்குள் 20 மணல் குவாரிகள் திறக்கப்பட்டால் அதைவிட கொடூரமாக கொள்ளிடம் ஆற்றை யாராலும் சீரழிக்கமுடியாது
ஆற்றுமணலுக்கு மாற்றாக எம்.சாண்ட், பி.சாண்ட் என பல மாற்று வழிகள் வந்துவிட்டது. தமிழக அரசும் நினைத்தால் மணல் உற்பத்தியை அதிகரிப்பது, செயற்கை மணல் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் மணல் தேவையை பூர்த்தி செய்யலாம்.
அவற்றை செய்யாமல் தொடந்து மணல் குவாரிகளை திறப்பது என்பது இயற்கை மீது நடத்தும் கொடூர தாக்குதலாகும். கொள்ளிடம் ஆற்றில் 10 மணல் குவாரிக்களை அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். இல்லையெனில் மண்ணையும், மக்களையும், நீர்வளத்தையும் காக்க மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பாமக முன்னெடுக்கும்" என அறிக்கை வாயிலாக கொதித்திருக்கிறார்.
அரசின் புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "இது அரசின் கொள்கை முடிவு, இதில் நாங்கள் எதுவும் கருத்து சொல்வதற்கில்லை" என்றபடி எஸ்கேப்பானார்கள்.
- ஆர்.விவேக் ஆனந்தன்