வழித்தட பிரச்சினைக்கு புகார் கொடுத்ததற்காக 10 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கோவில் தர்மகர்த்தாக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் காவிரி கிராஸ் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் சாமி தூக்கும் காணியாசிக்காரர்களான ராமசாமி, முனுசாமி, கிருஷ்ணன், வாசுதேவன், ஆறுமுகம் உள்பட 10 குடும்பத்தினருக்கும், கோவில் தர்மகர்த்தாக்களில் ஒருவரான சேகர் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே வழிதட பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இப்பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினர்கள் இடையே கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காணியாசிக்காரர்கள் சேகர் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், காணியாசிக்காரர்கள் உள்பட 10 குடும்பத்தினர் இன்றைய தினம் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும் போது, வழித்தட பிரச்சனைக்கு புகார் கொடுத்த காரணத்திற்காக கோவில் தர்மகர்தாக்களான ஆண்டியப்பன், சேகர், மாரியப்பன், ரமேஷ், மோகன்ராஜ், முனுசாமி உட்பட 10 பேர் ஒன்று சேர்ந்து கட்ட பஞ்சாயத்து நடத்தி தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
தங்களோடு ஊர் பொதுமக்கள் எந்த ஒரு காரியத்திற்கும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அதேபோல், தற்போது ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு வரும் நிலையில் அதற்கான வரியை கூட தங்களிடம் இருந்து வாங்க மறுப்பதாகவும், ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இதனால், தங்களது பிள்ளைகள் பிறந்தநாள் அன்று கூட கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, கோவிலுக்கு தாங்கள் செலுத்த வேண்டிய நேரத்திகடனை கூட செலுத்த முடியவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.