விருத்தாசலம் : மனநலம் பாதிக்கப்பட்டவர் அடித்து கொலை : போதை இளைஞர்கள் கைது

'மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அடித்து கொலை' செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் : மனநலம் பாதிக்கப்பட்டவர் அடித்து கொலை : போதை இளைஞர்கள் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே  உள்ள கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் அறிவழகன் (40)  இவருக்குத் திருமணம் ஆன நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டதால், இவருடைய  மனைவி பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட  அறிவழகன் நாள்தோறும் விருத்தாசலம் பகுதிகளில் சுற்றித் திரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.கடந்த 27-ம் தேதி விருத்தாசலம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுமான கடை அருகே, சுற்றிக் கொண்டிருந்தபோது, அங்கே பொது வெளியில் மது அருந்திக்  கொண்டிருந்த , கும்பலில் ஒருவருடைய செல்போனை மனநலம் பாதிக்கப்பட்ட அறிவழகன் திருடி விட்டதாகக் கூறி கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அடி தாங்க முடியாமல் வலியால் துடித்துக் கதறி அழுதுள்ளார். மனமிறங்காதவர்கள் அவரை அடித்து  கொலை செய்து விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளனர்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து விருத்தாசலம் போலீசார் பல்வேறு தடயங்கள் மூலம் அறிவழகனைத் தாக்கி கொலை செய்த மர்மநபர்கள் குறித்து மேற்கொண்ட  முதற்கட்ட விசாரணையில் விருத்தாசலம் அருகில் உள்ள குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த கோபாலின் செல்போனை அறிவழகன் திருடியதாகக் கூறி கோபால் மற்றும் அவரது நண்பர்கள் திருவரசன், அமீர் பாஷா, செந்தமிழ்ச்செல்வன், ஆகிய நான்கு பேரும் சேர்ந்து அறிவழகனை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் மகன் கோபால் (22), திருமூர்த்தி மகன் திருவரசன் (21), செந்தில் மகன் செந்தமிழ் செல்வன் (21), அலாவுதீன் மகன் அமீர் பாஷா (20) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com