சேலம் மாவட்டம் வாழப்பாடியில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலைக்கு காரணமான மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் பகுதியில் காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த சுப்புராயன் மகன் சக்திவேல்(23).
கொத்தனாரான இவர் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில், பைக்கில் கீழே விழுந்த நிலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சக்திவேல் தாயார் அஞ்சலம் புகாரின் பேரில் விபத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்தனர்.
இந்த நிலையில், சக்திவேலை பரிசோதித்த மருத்துவர்கள், பைக்கில் இருந்து கீழே விழாமல், வெட்டு காயம் அதிகம் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதனால், காதல் விவகாரத்தில் யாராவது வெட்டி இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர்.
இதில், கோணஞ்செட்டியூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்ததும், இதனால் சிறுமியின் சகோதரர்கள் திட்டமிட்டு, பைக்கில் சென்ற சக்திவேலை மறித்து, கொடுவலால் சரமாரியாக வெட்டியதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணி அளவில், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, வாழப்பாடி போலீசார் சக்திவேலை கொலை செய்த, சதீஷ்குமார் மற்றும்17 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொலைக்கு காரணமான மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். இது ஆணவக் கொலை என்பதால், போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, வாழப்பாடி போலீசாரிடம் பேசினோம். ' முதலில் சக்திவேல் வண்டியில் இருந்து கீழ விழுந்துவிட்டார் என்றே புகார் செய்திருந்தார்கள்.
பிறகு ஆஸ்பத்திரி போன பிறகுதான் வெட்டு காயம் என்றே தெரிந்திருக்கிறது. விசாரித்தபோதுதான் காதல் விவகாரம் என்று தெரிந்தது. பெண்ணின் சகோதரர் இப்படி செஞ்சிருக்கான். ஒரே சமுதாயம் என்பதால் ஆணவ கொலை எல்லாம் இல்லை.'என்றார்கள்.
- பழனிவேல்