மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2007ம் ஆண்டு பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாகக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படும் பாதாளச் சாக்கடை குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் 20 அடிக்கும் மேல் அபாயகரமான பள்ளங்கள் ஏற்படுவதும் அதனைத் தற்காலிகமாக நகராட்சியினர் சரி செய்வதும் தொடர் கதையாகிய வருகிறது. அடிக்கடி ஏற்படும் இந்த உடைப்பினால் பல்வேறு முக்கிய வீதிகளில் சாக்கடை நீர் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கழிவுநீர் முழுவதும் காவிரி ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள் ஆகியவற்றில் கலப்பதால் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகிறது. உச்சக்கட்டமாக நகராட்சி குடிநீரிலும் இந்த கழிவுநீர் கலந்து பெரும் தொற்று நோய் அபாயங்களையும் ஏற்படுத்தி வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பிரச்சினைகளை நகராட்சி தரப்பினர் அவ்வப்போது சரி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நகரின் பிரதான சாலையான கச்சேரி சாலையில் உதவி கலெக்டர் அலுவலகம் எதிரே பாதாளச் சாக்கடை கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையின் நடுவே 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனையடுத்து சாலையில் கனரக வாகனங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுச்சாலை வாழையாகத் திருப்பி விடப்பட்டது. பள்ளத்தைச் சுற்றித் தடுப்புகளை வைத்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இருப்பினும் அந்த வழியே வாகனங்கள் ஒரு வழிப்பாதையாக இயக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே வாகனங்களை இயக்க வேண்டியுள்ளது.
இது குறித்து நகராட்சி ஆணையர் செல்வபாலாஜியிடம் பேசினோம். “குழாயில் ஏற்பட்ட உடைப்பைச் சரிசெய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி ஏற்படும் உடைப்பு பிரச்சினையைத் தகுந்த வல்லுநர் குழு உதவியுடன் விரைவில் சரி செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இனி பாதாள கழிவு நீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.”என்றார்.
-ஆர்.விவேக் ஆன்ந்தன்.