திருநள்ளாறு : 'சனி விலகி விட்டது திருடு போன தங்க நகை வேண்டாம்' - புகார் அளிக்காமல் சென்ற வினோத பெண்

'உயிருக்கு வந்த ஆபத்து நகையோடு போய்விட்டது' உங்களை பிடித்த சனி விலகிவிட்டது என்று சிலர் கூறியதால் போலீசில் புகார் செய்யாமல் சென்ற பெண் !
திருநள்ளாறு :  'சனி விலகி விட்டது திருடு போன தங்க நகை வேண்டாம்' - புகார் அளிக்காமல் சென்ற வினோத பெண்

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம்  திருநள்ளாற்றில்  பிரசித்தி பெற்ற சனிபகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி விழா வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. ஆனால் திருக்கணித பஞ்சாங்கப்படி சில மாதங்களுக்கு முன்பே  சனிப்பெயர்ச்சி ஆகிவிட்டபடியால்  தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். குறிப்பாக வாரச் சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்களும் கோவிலுக்கு வருகை தந்து சுவாமியைத் தரிசனம் செய்து திரும்புகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் சனிக்கிழமையன்று மதுரை அரும்பனூர் அழகர் கோவில் மெயின்ரோட்டைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர்  திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்குச் சுவாமி  தரிசனம் செய்ய வந்திருந்தார். தனது குடும்ப ஜோதிடர் ‘குடும்பத்துடன் சனிபகவானைத் தரிசிக்க வேண்டும்’ என்று சொன்னதால் மனைவி உமா தேவியையும்  உடன் அழைத்து வந்திருந்தார். சுவாமியைத் தரிசித்து விட்டுத் திரும்பும் போது  கூட்ட நெரிசலில் உமாதேவியின் கழுத்திலிருந்த ஆறரை பவுன் தங்க நகை காணாமல் போயிருக்கிறது.  கூட்டத்தைப் பயன்படுத்தி நகை திருடர்கள் திருடியிருக்கலாம் என அதிர்ச்சியடைந்த அவர்கள்  போலீசில் புகார் கொடுக்கலாம் என்று புறப்பட்டிருக்கின்றனர். 

அப்போது அங்கிருந்த சிலர்’ உயிருக்கு வந்த ஆபத்து நகையோடு போய்விட்டது. உங்களைப் பிடித்த சனி விலகிவிட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியதால் போலீசில் புகார் செய்யாமல் மதுரை திரும்பிச் சென்றுள்ளனர். 

பின்னர் ஊர் திரும்பிய கருப்பசாமி தம்பதியினர்  “யாரோ கூறியதைக் கேட்டு புகார் செய்யாமல் திரும்பிவிட்டோமே. ஒருவேளை அவர்களே நகையைத் திருடிவிட்டு நம்மைத் திசை திருப்ப இப்படிக் கூறியிருக்கலாமே’  என நினைத்த அவர்கள்  நேற்று திருநள்ளாறு காவல்நிலையம் வந்து கடந்த மாதம் நடந்த  திருட்டு  சம்பவம் குறித்து புகார் கொடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com