தருமபுரி : 'சாலையில் ஆறாக ஓடிய அரசு மதுபானம்' - அதிர்ச்சியில் உறைந்த மது பிரியர்கள்

அரசு மதுபானம் ஆறு போல் வீதியில் வழிந்தோடிய சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி : 'சாலையில் ஆறாக ஓடிய அரசு மதுபானம்' - அதிர்ச்சியில் உறைந்த மது பிரியர்கள்

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைக் கிராமம் பூதிநத்தம்.இந்த பகுதியைச்  சேர்ந்த மது பிரியர்கள் பாபப்பாரப்பட்டி அரசு மதுபான கடைக்குச் சென்று தான் மது வாங்கி குடிக்க வேண்டும். இதனை பயன்படுத்தி பூதிநத்தம் , பெரியூர், பிக்கிலி ,கொல்லப்பட்டி, புதுகரம்பு, உள்ளிட்ட மலைக் கிராமப் பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக அரசு மதுபானங்களைப் பெட்டி பெட்டியா  பதுக்கி வைத்துக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மது கிடைப்பதால் கல்லூரி மாணவர்கள், இளம் வயதினர், கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் எந்நேரமும் மது அருந்தி மதுபோதைக்கு அடிமையாகி உள்ளனர். இவர்களின் உடல் நலம் பாதிப்படைந்து வருவதோடு மட்டுமல்லாமல், போதிய வருமானம் இன்றி இவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றது.

இதனை எதிர்த்து பூதிநத்தம் கிராமத்திற்க்குள் மது விற்க அனுமதிக்கக்  கூடாது என பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில்  பொது மக்கள் புகார் அளித்தனர். ஆனால்  காவல்துறைக்கும்,வருவாய்த்துறைக்கும் மது விற்பவர்கள்  மாதந்தோறும் மாமூல் தருவதால் எந்த அதிகாரியும் இதைப்பற்றிக் கண்டு கொள்ளவில்லை எனப் பொதுமக்கள்  குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்கள்  ஒன்று திரண்டு சட்ட விரோதமாக சந்துகடை வைத்து மது விற்பனை செய்து வரும் ஜெயராமன் வீட்டை முற்றுகையிட்டு, சூறையாடினர், வீட்டில் பதுக்கி வைத்திருந்த அரசு மதுபானங்களை வீதியில் கொட்டி உடைத்தனர்.மதுபானம் ஆறு போல் வீதியில் வழிந்தோடியது.இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக மாவட்ட நிர்வாகம்  உரிய நடவடிக்கை எடுத்து சந்து கடைகளை முழுமையாக அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com