கேரளா, மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள போர்டு கொச்சி பகுதியைச் சேர்ந்த 8 நண்பர்கள் ஏதாவது நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா அருகே மலையிஞ்சி பகுதியில் வனத்தினுள் உள்ள கிழார் குன்று நீர்வீழ்ச்சிக்குச் சென்றுள்ளனர்.
பின்னர் வனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டும் என்பதால் தங்களுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கூகுள் மேப் உதவியுடன் நீர்வீழ்ச்சிக்குச் சென்றுள்ளனர். கூகுள் மேப் வேறு ஒரு பாதையைக் காட்டியதால் வழி மாறி சென்றுள்ளனர். அவர்கள் சென்ற பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானைகள் அதிகம் நடமாடியுள்ளது. பின்னர் யானையின் பிளிறல் சத்தம் கேட்டுள்ளது. பயத்தில் இளைஞர்கள் அனைவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆங்காங்கே அனைவரும் ஓடி ஒளிந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜிஜு ஜேம்ஸ் என்ற இளைஞர் அந்தப் பகுதியிலிருந்த பாறையில் நின்ற போது எதிர்பாராத விதமாகக் கால் தவறி 30 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார். அவரது கை மற்றும் கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மற்ற இளைஞர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் உதவியுடன் பாறையில் தவறி விழுந்த ஜீஜூ ஜேம்ஸை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்டு அவரை முண்டக்கயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.