தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நியாயவிலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேசன் அரிசி மற்றும் மண்ணெண்ணைய் போன்றவற்றை ஒரு சிலர் கடத்தி வருகின்றனர்.
பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைகொடுத்து வாங்கி அதிக லாபத்திற்க்காக கேரளாவில் விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.
இதனை தடுக்க தமிழக அரசு தனிப்படைகள் அமைத்து கண்காணித்து வந்தாலும், கடத்தல் மட்டும் தொடர்ச்சியாக எந்த தடையும் இன்றி நடைபெற்று வருகின்றது. இவ்வாறு கடத்தி செல்லப்படும் ரேசன் அரிசிகள் சில நேரங்களில் அதிகாரிகளின் கண்ணில்பட்டு சிக்கி கொள்வதும் உண்டு.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு கல்குளம் வட்டவழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அதிகாரிகள் சுவாமியார்மடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அந்த வழியாக மினி டெம்போ ஒன்று வைக்கோல் புதர்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது.
அந்த வாகனத்தை சோதனை செய்ய வேண்டி அதிகாரிகள் நிறுத்த சைகை காட்டியபோது அதனை பொருட்படுத்தாத ஓட்டுநர் டெம்போவை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த வாகனத்தை பின்தொடர்ந்து விரட்டி சென்று மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வைத்து சுற்றி வளைத்து பிடித்தனர். உடனே டெம்போ டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார். இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாகனத்தின் மீதேறி வைக்கோல் கட்டுகளை கீழே தள்ளி பார்த்த போது அதற்கு அடிப்பகுதியில் ஏராளமான சாக்கு மூடைகளில் சுமார் 4 ஆயிரம் கிலோ மதிப்பிலான ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் இந்த அரிசிகளை நூதன முறையில் கடத்தி கேரளாவுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.