கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை செய்ய வந்த அதிகாரிகள் கார் கண்ணாடியை தி.மு.க-வினர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு செங்குந்தபுரத்தில் இருக்கிறது. இவரது வீட்டிற்கு இன்று காலை வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வதாக கூறி உள்ளே சென்றனர்.
அப்போது, அங்கு திரண்ட தி.மு.க. தொண்டர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியே வரவேண்டும் என்று கூச்சலிட்டு அவர்கள் வந்த கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள்.
கும்பல் அதிகமாகி அனைவரும் வீட்டிற்குள் செல்ல முற்பட்ட போது வீட்டுக்குள் இருந்த அதிகாரிகள் அனைவரும் சோதனையை கைவிட்டு வெளியே வந்தனர்.
வெளியே வந்த அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு தி.மு.க தொண்டர்கள் மீண்டும் கூச்சலிட்டதால் அந்த இடமே கலவர சூழ்நிலை ஏற்பட்டது. உடனே அதிகாரிகள் அனைவரும் கரூர் எஸ்.பி அலுவலகம் சென்று அங்கிருந்த எஸ்.பி சுந்தரவதனிடம் புகார் கொடுத்தனர்.
மேலும், தங்கள் சோதனைக்கு பாதுகாப்பு வழங்கவும் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் மதியம் மீண்டும் சோதனை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் வீடுமட்டுமின்றி, காண்ட்ராக்டர் சங்கர் உட்பட 10-க்கும் மேற்பட்ட செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் கரூரில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
- கரூர் அரவிந்த்