ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமி டையே காதல், காதல் திருமணம் என்பது நமது கலாசாரத்திற்கு புதிதல்ல. சங்க இலக்கியங்களில் காதல் பற்றி பல பாடல்கள் உண்டு!
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமி டையே காதல், காதல் திருமணம் என்பது நமது கலாசாரத்திற்கு புதிதல்ல. சங்க இலக்கியங்களில் காதல் பற்றி பல பாடல்கள் உண்டு!
‘‘காதல் என்பது பிரச்னை இல்லை. ஆனால், காதலைத் தூண்டுகிறேன் பேர்வழி என்று மார்க்கெட்டுகளில் தள்ளப்படும் டேட்டிங் ஆப்ஸ், அடல்ட் ஒன்லி கேம்ஸ் உள்ளிட்டவற்றால் ஆண்களும் பெண்களும் கடுமையான மனச்சிதைவுக்கு ஆளாக்கப் படுகிறார்கள்’’ என்று எச்சரிக்கிறார்கள் மனோதத்துவ அறிஞர்கள். இந்த விவகாரம் தொடர்பாக பிரபல உளவியல் நிபுணர் குறிஞ்சியிடம் பேசினோம்...
‘‘உலகத்தில் எந்த ஒரு விஷயமுமே இயற்கையாக நடக்கும்பட்சத்தில், பக்கவிளைவுகளோ பாதிப்புகளோ குறைவாகவே இருக்கும். அதேநேரம் செயற்கை யாக ஒரு விஷயத்தைத் தூண்டும்போது அதன் பாதிப்புகள் கடுமையானதாக இருக்கும். நமது உடலும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நமது உடலுக்குள் சில சிஸ்டம்கள் உள்ளன.
அந்த சிஸ்டம்கள்தான் நாம் ஒரு காரியத்தை எப்போது செய்யவேண்டும், அதில் செலவிடும் நேரம் உள்ளிட்டவற்றை முறைப்படுத்தும். மனிதர்களுக்கு ‘இன்ஹிபிட்டரி சர்கியூட்’ (Inhibitory circuit) என்பது பிரேக்கைப் போல!
நாம் பொது இடங்களில் செய்யக்கூடாத விஷயங்களை, செய்யவிடாமல் இந்த சர்க்கியூட் நமது உடலை கட்டுப்படுத்தும். உதாரணமாக, பொது இடங்களில் நம்மால் இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியாது என்பதால், நமது உடலை ‘இன்ஹிபிட்டரி சர்க்கியூட்’தான் கட்டுப் படுப்படுத்தி வைத்திருக்கும். இதனால் எவ்வளவு அவசரமாக இருந்தாலும், நாம் இயல் பாகவே இருப்போம். அதேநேரம் வீட்டுக்குள் நுழைந்ததும், நமது ‘ரிவார்ட் சர்க்கியூட்’ (Reward circuit) வேலை செய்யத் தொடங்கும். இது நமது தேவைகளை பூர்த்தி செய்யத் தூண்டும் சர்க்கியூட். இப்படித்தான் மனிதனின் உடலை இயற்கையான ஒரு ஆக்சிலரேட்டர் மற்றும் பிரேக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் சக மனிதர்களுட னான பழக்கம் நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. இதனால் பதற்றம், தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களாகப் பலரும் மாறிவருகின்றனர். இந்த நிலையிலுள்ளவர்கள்தான் அதிகளவில் சோஷியல் மீடியாவில் வடிகால்களைத் தேடுகின்றனர். குறிப்பாக, டீன்ஏஜில் இருப்பவர்களுக்கு எதிர்பாலினத்தவரோடு பேச வேண்டும் என்று தோன்றும். இயல்பாக உள்ளவர்கள் நேரில் பேசிவிடுவார்கள். அதனால் பெரிய பிரச்னையும் ஏற்படாது. காரணம், ஏற்கெனவே சொன்ன ‘இன்ஹிபிட்டரி சர்க்கியூட்’ எவ்வளவு பேசவேண்டுமோ அதை எப்படிப் பேசவேண்டுமோ அந்தளவுக்கு மட்டுமே பேசவிடும். இதன் மூலம் கிடைக்கும் கிக்கே சாதாரண மனநிலை கொண்டவர்களுக்கு போதுமானதாக இருக்கும்.
ஆனால், வெளியே பேச முடியாமல் ‘டேட்டிங் ஆப்’களில்(Dating app) பேசுபவர்கள்தான் சிக்கலில் மாட்டுவார்கள். டேட்டிங் ஆப்களில் பேசுவது ரியாலிட்டி அல்ல. தங்களுடைய பலவீனத்தை மறைத்துவிட்டு எதிர்பாலினத்தை ஈர்க்க முழுமூச்சுடன் செயல்படுவார்கள். ரியாலிட்டியை மொத்தமாக மறந்துவிட்டு அந்த உலகத்திலேயே மூழ்கிவிடுவார்கள். இதுதான் சாதாரண சாட்டிங்கில் தொடங்கி ‘செக்ஸ் சாட்’ வரை கொண்டு சென்றுவிடும். முன்பின் தெரியாத ஒருவரை மொபைல் மூலம் டேட்டிங் செய்யும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும் அப்போது ஏற்படாது.
ஒருவேளை, டேட்டிங்கில் ஈடுபடுபவர் சமூக விரோதியாக இருக்கும் பட்சத்தில், ரகசியமாக சாட் வீடியோக்களை ரெக்கார்ட் செய்து வெளியிடும் அபாயம் உள்ளது. ஆனால், இருவருமே நம்பிக்கையான நபர்கள் என்று வைத்துக்கொண்டாலும், தங்களுடைய சுயரூபத்தை மறைத்துக்கொண்டே டேட்டிங் செய்திருப்பார்கள். பின்னர் அவர்கள் நேரில் சந்தித்துக்கொண்டாலோ திருமணம் செய்துகொண்ட பிறகோதான் சுயரூபம் வெளிப்படும். டேட்டிங் செயலிகள் மூலம் நடைபெறும் திருமணங்கள் 90% தோல்வியடைவதற்கு இதுதான் காரணம்!
இதைவிட முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. டேட்டிங் செயலிகளைப் பொருத்தவரை, ஒருவர் தனது பார்ட்னரிடம் சொல்லிக்கொள்ளாமல், தங்களை திடீரென்று மறைத்துக்கொள்ளும் வசதி உள்ளது. இதனால் பல மாதங்களாக சாட் செய்து வந்த ஒருவர் திடீரென்று காணாமல் போய்விட்டால், அதுவே கூட அவர்களை மேலும் டிப்ரஷனுக்குத் தள்ளிவிடும்.
டேட்டிங் செயலிகள்கூட தேவலாம்! ஆனால், ‘அடல்ட் கேம்ஸ்’ என்பது இன்னமும் அபாயகரமானது. தற்போது பிளே ஸ்டோர்களில் எக்கச்சக்கமாக கொட்டிக்கிடக்கின்றன ‘அடல்ட் கேம்ஸ்’. நம் அனைவருக்குமே நமது லைஃப் பார்ட்னர் அல்லது பாய் ஃபிரெண்ட் எப்படி இருக்க வேண்டும் என்று ஓர் எதிர்பார்ப்பு இருக்கும். ரியாலிட்டியில் அது 100% நிறைவேறாது. ‘அடல்ட் கேம்ஸ்’ என்பது நமக்கு விருப்பமான பாய் ஃபிரெண்ட் அல்லது கேர்ள் ஃபிரெண்டை நாமே கஸ்டமைஸ் செய்து, அப்படியொரு அவதாரை உருவாக்கி, அதனுடன் சாட்டிங் செய்ய முடியும்!
இது எதுவுமே உண்மை கிடையாது. மாறாக, பின்புலத்திலிருந்து கம்ப்யூட்டர்கள்தான் அந்த அவதார்களை பேசவைக்கும். அதுமட்டுமல்ல... வெளியே சொல்ல முடியாத ரகசியமான சில ஃபேன்டஸிகள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும். அந்த ஃபேன்டஸிகளை ஓப்பனாகவே தூண்டும் வகையில் இந்த விளையாட்டுகள் செயல்படும்.இதைப் பயன்படுத்துபவர்கள் விரைவிலேயே அதற்கு அடிமைகளாகிவிடுவார்கள். இந்தச் சூழ்நிலையில் இயல்பாக அவரால் இன்னொருவரை திருமணம் செய்து வாழ்வது கடினமாகிவிடும். காரணம், அவர்களின் மனது ஃபேன்டஸியிலேயே இருக்கும். அது நிஜமல்ல என்பதை அவர்களால் ஏற்க முடியாது. இதுவும் திருமண உறவுகளில் சிக்கல் ஏற்பட மிகப்பெரிய காரணமாக அமைகிறது.
இவை ஒருபுறம் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்னொருபுறம் LGBTQ என்ற புது வியாதி நமது சமுதாயத்தினரைத் துரத்தி வருகிறது. குரோமோசோம் குறைபாடுகளால் திருநங்கைகளாக, திருநம்பிகளாக மாறுவது இயற்கைதான். முன்பு குறைந்த அளவிலேயே இது நடந்து வந்தது. ஆனால், தற்போது இயற்கையாக அல்லாமல், கே (Gay), லெஸ்பியன்களாக (Lesbian) இருப்பதில் எந்தத் தவறுமில்லை. சொல்லப்போனால் அதுதான் கெத்து என்ற தவறான கருத்து இளைய சமுதாயத்தினரிடம் அதிகளவில் பரவி வருகிறது.
ஏற்கெனவே ஆபாச வலைத்தளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. கட்டுப்பாடில்லாமல் அவற்றைப் பார்த்து பரவசமடையும் இளசுகளுக்கு ஒரு கட்டத்தில் அது போரடித்துவிட்டால், அடுத்தக் கட்டமாக என்ன செய்வது என்று தெரியவில்லை. இதுவும் அவர்களை எக்குத்தப்பான தன்பாலினத்தவரோடு உறவு வைத்துக்கொள்ள தூண்டுவதாக அமைகிறது. தவிர, பலருக்கு தங்களுடைய பாலினம் என்ன என்பதில் எழும் சந்தேகமே அவர்களை திருநங்கைகளாகவும் திருநம்பிகளாகவும் மாற வைக்கிறது. அப்படி மாறியவர்கள் திருமணம் செய்துகொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதைத் தாண்டி மனிதன், மிருகம் என்ற பேதமில்லாமல், அனைத்திடமும் இன்பம் தேடும் சைக்கோ மனப்பான்மையைத் தூண்டும் வித-மாகவும் நிலைமை மோசமடைந்துள்ளது.
இதை இப்படியேவிட்டால் இளைய சமுதாயம் சீரழிவது உறுதி. எனவே பெற்றோர்தான் உஷாராக இருக்க வேண்டும். பதின்ம வயதை எட்டியப் பிள்ளைகளை தங்கள் கண்காணிப்புக்குள் வைக்க வேண்டும். அதற்காக அவர்களை வீட்டுச் சிறையில் வைக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. சுதந்திரத்துடன்கூடிய கட்டுப்பாடுகளை பிள்ளைகளுக்கு விதிக்க வேண்டும். ஸ்மார்ட்போன் பயன்படுத்தலாம். இன்டர்நெட், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என்று பிள்ளைகள் எதைப் பயன்படுத்தினாலும் அவற்றுக்கான பாஸ்வேர்டு பெற்றோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல பெண் பிள்ளை என்றால் தாயும், ஆண் பிள்ளை என்றால் தந்தையும் அவர்களின் அந்த வயது சார்ந்த தேவைகள், அவர்கள் உடலில் நடக்கும் மாற்றங்கள் பற்றி கண்ணியமாகவும் பக்குவமாகவும் எடுத்துச் சொல்லலாம்.
இப்படிச் செய்யும்போது, ‘ரிவார்ட் சர்க்கியூட்’ செயல்பாடு குறைந்து, ‘இன்ஹிபிட்டரி சர்க்கியூட்’டின் செயல்பாடு அதிகரிக்கும். தவறுகளும் நிகழாது’’ என்றார் முத்தாய்ப்பாக!