வங்கிகளைப் பொருத்தவரை ‘சேமிப்புக் கணக்கு’ (Savings account) வைத்திருப்பவர்களை விட ‘நடப்புக் கணக்கு’ (Current account) வைத்திருப்பவர்கள் தான் அதிகம் .
வங்கிகளைப் பொருத்தவரை ‘சேமிப்புக் கணக்கு’ (Savings account) வைத்திருப்பவர்களை விட ‘நடப்புக் கணக்கு’ (Current account) வைத்திருப்பவர்களை அதிகம் ஆதரிப்பதுபோல தெரிகிறதே... உண்மையா? & நிர்மலா சந்திரன், குடியாத்தம்.
‘‘இது ஒருவகையில் உண்மைதான். ஏனென்றால், இதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் வணிக வாடிக்கையாளர்கள் பிற நீண்டகால டெபாசிட்களையும் அதே வங்கியில் செய்ய வாய்ப்பு உண்டு. தவிர, தேவைப்படும்போது அவர்களுக்கு கடன் உதவியும் செய்தால், அதன் மூலம் வங்கிக்குக் கிடைக்கும் வட்டி லாபம்தானே!
நடப்புக் கணக்கினால் மேலும் சில லாபங்களும் உண்டு. அதில் போடும் பணத்திற்கு வங்கிகள் வட்டி அளிப்பதில்லை (வேலைப்பளு அதிகமாயிற்றே). சில நிறுவனங்கள் தங்கள் நடப்புக் கணக்குகளில்கூட அதிக பேலன்ஸ் வைத்திருக்கும் (அளிக்கப்பட்ட காசோலைகள் எந்த நேரமும் பணம் பெற வந்து நிற்கலாம் என்கிற பயம்). இப்படி இருக்கும் தொகையைப் பிறருக்குக் கடனாகக் கொடுத்து, வட்டி ஈட்டலாம் என்பதால் அதுவும் வங்கிக்கு லாபம்தானே!’’
என்னுடைய அப்பாவுக்கு உடல் நலமில்லாதபோது பக்கத்து வீட்டு இளைஞனிடம் தமது ஏ.டி.எம். அட்டையைக் கொடுத்து, கடவுச் சொல்லையும் கூறி, ஒருமுறை பணம் எடுத்து வரச் செய்தார். இப்போது என்ன செய்வது?& திருமதி. கே., வில்லுக்குறி
‘‘அதாவது, அந்த இளைஞரைப் பற்றிய நம்பிக்கை இப்போது உங்களுக்குக் குறைந்துவிட்டதுதானே? எனவே மறுபடியும் அந்த இளைஞரின் கைகளில் உங்கள் தந்தையின் ஏ.டி.எம். அட்டை கிடைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏ.டி.எம். அட்டைக்கான கடவுச் சொல்லை மாற்றிவிடுங்கள். அந்த இளைஞரிடம் அந்த அட்டை கிடைத்தால்கூட அதன் மூலம் பணத்தை எடுக்க முடியாது.
உங்கள் ரகசிய எண்ணை’ (Password) ரகசியமாகவே வைத்திருங்கள். சிலபேர் அந்தச் சொல்லை ஏ.டி.எம். அட்டை உறையிலேயே எழுதி வைத்திருப்பார்கள். கேட்டால், ‘எனக்கு மறதி அதிகம்’ என்பார்கள். இதைவிட முட்டாள்தனம் வேறொன்று இருக்க முடியாது. உங்கள் ரகசிய அட்டை தொலைந்து விட்டாலோ களவாடப்பட்டாலோ யார் வேண்டுமானாலும் அதைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கிலிருந்து தொகையை எடுத்துக்கொள்ள முடியும். ஜாக்கிரதை!’’
வங்கியிடமிருந்து நகைக் கடன் பெற என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்? & துளசி ரங்கராஜன், கும்பகோணம்.
‘‘நகைகளின் மீது கடன் பெற உங்கள் விலாசம் தொடர்பான சான்று, அடையாளச் சான்று ஆகியவை தேவை. ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றில் ஏதாவது தேவை. கூடவே உங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களும் தேவைப்படும். ஆனால், வங்கியைப் பொருத்தவரை நீங்கள் அதன் வாடிக்கையாளராக இருந்தால் மட்டுமே கடன் தருவார்கள். அதாவது, ஏற்கெனவே உங்களுக்கு அந்த வங்கியில் சேமிப்புக் கணக்கோ நடப்புக் கணக்கோ இருக்கவேண்டும். அல்லது அப்படி ஒரு கணக்கை முதலில் நீங்கள் துவக்க வேண்டும். தவிர, குறைந்தபட்சம் 18 கேரட்டாவது கொண்ட தங்க நகைகளுக்குத்தான் வங்கிகளில் கடன் தருவார்கள்.’’
நகைகளை வங்கிகளில் அடகு வைப்பது, தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைப்பது இரண்டில் எது லாபகரமானது? & த.சத்தியநாராயணன், அயன்புரம்.
நகையுடன் போனோமா சட்டுபுட்டென்று கடனை வாங்கிக்கொண்டு வந்தோமா என்று வசதிக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் தருபவராக இருந்தால் உங்கள் சாய்ஸ் தனியார் நிதி நிறுவனங்களாக இருப்பதில் தவறில்லை. (அதனால்தான் இந்தக் கோணத்தை அவர்கள் அதிகமாக விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள்).
தனியார் நிதி நிறுவனங்கள் தங்க நகைகளுக்கு கடன் வழங்குவதையே முக்கிய தொழிலாகக் கொண்டுள்ளனர். ஆனால், வங்கிகளைப் பொருத்தவரை அவற்றின் பலவித பணிகளில் தங்க நகைக் கடனும் ஒன்று, அவ்வளவுதான்! அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி நேரம் என்றால் ‘பிறகு வாருங்கள்’ என்று வங்கியில் கூறலாம். கிளையில் கூட்டம் அதிகமிருந்தால், ‘சாயந்திரம் வாருங்கள். அப்போது கூட்டம் குறைந்துவிடும். கடன் தொகையை நீங்கள் ஏ.டி.எம். மூலமாக இன்று மாலையே எடுத்துக்கொள்ளலாம்’ என்று கூறலாம். ஆனால், ஏ.டி.எம். மூலமாக ஓரளவுக்கு மேல் தொகையை நம்மால் எடுத்துக்கொள்ள முடியாது. எனவே அடுத்த நாள் வங்கிக்கு வந்துதான் முழுக் கடன் தொகையும் பெற்றுக்கொள்ள முடியும்.
சில வங்கிகள் குறிப்பிட்ட காரணத்துக்காகத்தான் (விவசாயம், தொழில் தொடங்க, தொழிலைப் பெருக்க என்பதுபோல்) தங்க நகைக் கடன் வழங்குகின்றன. தவிர, வங்கிகளைப் பொருத்தவரை தங்க நகைகளை அடகு வைத்து பல லட்சம் அல்லது கோடி என்கிற அளவிலெல்லாம் நகைக் கடன் பெறவே முடியாது.’’
மிகவும் அழுக்கடைந்த நோட்டுகளை வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் தள்ளிவிடப் பார்க்குமா? & வசந்தி தேவி, நாமக்கல்.
‘‘நம்மிடம் ஓர் அழுக்கடைந்த நோட்டும் நல்ல நோட்டும் இருந்தால் அழுக்கு நோட்டைத்தான் முதலில் பிறரிடம் தள்ளிவிட முயற்சிப்போம். ஆனால், வங்கிகள் அப்படிச் செய்யக்கூடாது என்கிறது ரிசர்வ் வங்கி.வாடிக்கையாளர்களிடமிருந்து தங்களுக்கு வந்து சேரும் ரூபாய் நோட்டுகளை ‘பயன்படுத்தக்கூடியவை’, ‘பயன்படுத்த லாயக்கு இல்லாதவை’ என்று இரண்டு வகையாகப் பிரிக்க வேண்டும். பயன்படுத்தக்கூடியவற்றைத்தான் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும். லாயக்கு இல்லாத நோட்டுக்களை ரிசர்வ் வங்கிக்கு அளித்து அதற்கு ஈடான தொகையைப் பெறலாம்.’’