வீரர்,வீராங்கனைகளுக்கு ஆதரவளிக்கும் உலக மல்யுத்த கூட்டமைப்பு - வரப்போகும் புதிய சிக்கல் என்ன?

மல்யுத்த சங்க தலைவர் மீதான விசாரணையில் முன்னேற்றம் இல்லாதது தான் இந்த பிரச்சனைக்கு காரணம்
வீரர்,வீராங்கனைகளுக்கு ஆதரவளிக்கும் உலக மல்யுத்த கூட்டமைப்பு  - வரப்போகும் புதிய சிக்கல் என்ன?

மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததற்கு எதிராக ஒருங்கிணைந்த உலக மல்யுத்த கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்யும் என 45 நாள் கெடுவிதித்து இந்தியாவை எச்சரித்துள்ளது உலக மல்யுத்த கூட்டமைப்பு.

பாஜக எம்பியான பிரிஜ் பூஷண் சரண் சிங், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராகவும் இருக்கிறார். இவர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. இவர் மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டும், மத்திய அரசும், காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யக் கோரி வீரர் மற்றும் வீராங்கணைகள் டெல்லி ஜந்தர் மந்தரியில் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வருகிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவையடுத்து பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போக்சோ உள்பட 2 வழக்குகள் பதியப்பட்டன. ஆனாலும் கைது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போராட்டத்தையும் கைவிடாமல் கடந்த ஒரு மாதத்துக்கும் அதிகமாக வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் கடந்த 28 ம் தேதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது உச்சத்தை எட்டியது. நியாயம் கேட்டு புதிய நாடாளுமன்றத்திற்கு படையெடுத்தனர், போராட்ட வீரர் வீராங்கனைகள். இவர்களை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்ட போலீசார்களால் வீரர், வீராங்கணைகள் பலவந்தமாக கைது செய்யப்பட்டனர். அதோடு அவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பதக்கங்களை வீச சென்ற போது நடந்த பேச்சு வார்த்தை
பதக்கங்களை வீச சென்ற போது நடந்த பேச்சு வார்த்தை

இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் பலர் இவர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தனர். இதையடுத்து பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், விஜேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கணைகள் தாங்கள் வென்ற ஒலிம்பிக் பதக்கங்கள் உள்ளிட்ட பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசி எறிந்து எதிர்ப்பை காட்ட முற்பட்ட நிலையில், விவசாய சங்க தலைவர் நரேஷ் தியாகத் வந்து 5 நாள் அவகாசம் வழங்கும்படி கேட்டு பதக்கங்களை பெற்று கொண்டார். இதையடுத்து வீரர், வீராங்கணைகள் அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்நிலையில் ஒருங்கிணைந்த உலக மல்யுத்த கூட்டமைப்பு இந்த விவகாரத்தில் தலையீட்டு வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கணைகள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளதோடு, பகிரங்கமாக இந்தியாவை எச்சரித்தும் உள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரின் பாலியல் புகார் தொடர்பான விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராடி வருகின்றனர். இதனை உலக மல்யுத்த கூட்டமைப்பு கவனித்து வருவதோடு, அதுதொடர்பாக கவலையும் கொள்கிறது. முதலிலேயே பிரச்சனைக்கு தீர்வு கண்டு இருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. மல்யுத்த வீரர், வீராங்கணைகள் பேரணி செல்ல முயன்றபோது கைது செய்தது மற்றும் ஒரு மாதமாக அவர்கள் போராடிய இடத்தில் இருந்து வெளியேற்றியதும் துயரை கொடுத்துள்ளது. இந்த செயல்களுக்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவிக்கிறது என்றதோடு மல்யுத்த சங்க தலைவர் மீதான விசாரணையில் முன்னேற்றம் இல்லாதது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் உலக மல்யுத்த கூட்டமைப்பு மல்யுத்த வீரர்களுடன் சந்திப்பை நடத்தி அவர்களின் பிரச்சனையை கேட்றிந்து பாதுகாப்பு பற்றியும் ஆலோசனை நடத்தும். அதோடு மல்யுத்த வீரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். இறுதியாக ஒருங்கிணைந்த உலக மல்யுத்த கூட்டமைப்பு இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு (ஐஓஏ) மற்றும் இந்திய மல்யுத்த சம்மேளனம் ஆகியவற்றின் ஒக் கமிட்டியிடம் இருந்து அடுத்த பொது கூட்டமைப்பு தேர்வு குறித்து கூடுதல் தகவல்கள் கோரும். இதற்கு 45 நாள் கெடு வழங்கப்படும். இதனை செய்ய தவறும் பட்சத்தில் உலக மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய மல்யுத்த சம்மேளத்தை சஸ்பெண்ட் செய்யும். மேலும் மல்யுத்த வீரர்களை ‛நியூட்ரல் பிளாக்’உடன் போட்டியில் பங்கேற்க செய்யும். இந்த விஷயத்தில் ஏற்கனவே உலக மல்யுத்த கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற இருந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இடம் மாற்றப்பட்டது. இது நினைவூட்டப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு புதிய சிக்கல் உருவாகி இருக்கிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com