பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயத்தை நடத்த தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
ஜல்லிக்கட்டிற்காக தமிழகத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையின்போது மதுரை பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக சொல்லி, அதற்கு எதிராக விலங்குகள் நல வாரியம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2014-ம் ஆண்டு மே 8-ந் தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது.
இது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், வீரர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தமிழகம் முழுவதும் பெரும் போராட்டமாக வெடித்தது. இளைஞர் பட்டாளங்கள் ஒன்றுபட்டு பலவிதமான போராட்டங்களை நடத்தினார்கள். அதிலும், சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நடந்த போராட்டமானது, நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதை சமாளிக்க முடியாத தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வகைசெய்து அவசர சட்டம் இயற்றியது. ’விலங்குகள் வதைத் தடுப்பு சட்டம் (தமிழ்நாடு திருத்தம்)-2017’என்ற பெயரில் நிரந்தரச் சட்டமும் இயற்றப்பட்டது. அதன் பேரில் தான் தமிழகத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல, மகாராஷ்டிர அரசும் மாட்டு வண்டி பந்தயத்தை அனுமதிக்க சட்டத்திருத்தம் செய்துள்ளது. இந்த இரு மாநில சட்டங்களையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பீட்டா போன்ற அமைப்புகளால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கான விசாரணை கடந்த டிசம்பர் மாதமே முடிவுற்றது.
ஜல்லிக்கட்டு வழக்கு மீதான விசாரணையின் போது, "ஜல்லிக்கட்டு போன்ற காளைகளை அடக்கும் விளையாட்டுகளில் மனிதர்களின் பொழுதுபோக்கிற்காக விலங்குகளை பயன்படுத்தலாமா? நாட்டு மாடுகளைப் பாதுகாக்க விளையாட்டு எப்படி அவசியமாகிறது? என்று தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கு தமிழக அரசு, ”ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்லது கேளிக்கை அல்ல என்றும் வரலாற்று, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்றும் ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு எந்த கொடுமையும் இழைக்கப்படுவதில்லை, ஜல்லிக்கட்டில் ஈடுபடும் காளைகள் ஆண்டு முழுவதும் விவசாயிகளால் பராமரிக்கப்படுகின்றன என்றும் பதிலளித்ததோடு, கேளிக்கையின் இயல்பு கொண்ட விளையாட்டு செயல்பாடு கலாச்சார மதிப்பைக் கொண்டிருக்க முடியாது என்ற கருத்து தவறானது” என்றும் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பிலும் இந்த வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இவ்வாறாக விசாரணை கடந்த டிசம்பரிலேயே முடிவடைந்த நிலையில், தீர்ப்பு மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று (மே 18) இவ்வழக்குக்கு தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம். நீதிபதிகள் கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்குகிறது.