13 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இரு பிரிவிலும் கோப்பையை வென்று தூத்துக்குடி மாவட்ட அணி அசத்தியிருக்கிறது.
தமிழ்நாடு கூடை பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான 13 வயதுக்கு உட்பட்ட சாம்பியன்ஷிப் கூடைப்பந்து போட்டி திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் ஒரு வாரம் நடந்தது.
போட்டியில் தமிழக முழுவதும் இருந்து அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் பெண் அணிகள் கலந்து கொண்டனர்.
இரு பிரிவிலும் வெற்றி பெற்று தூத்துக்குடி மாவட்ட அணிகள் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. இதன் மூலம் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.
இது போன்ற போட்டிகளில் சென்னை, கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் சாம்பியன்ஷிப் ஆவதுதான் வழக்கம். முதல்முறையாக தூத்துக்குடி மாவட்டம் இந்த சாதனையை முறியடித்துள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் கமிட்டி உறுப்பினர் பாலகிருஷ்ணனிடம் கேட்டோம். "தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகத்தை பொருத்தவரை இது வரலாற்றுச் சாதனைதான்.
வழக்கமாக சென்னை போன்ற மாவட்டங்கள் தான் இதுபோன்று சாதனை படைக்கும். அந்த சாதனையை முறியடித்து தூத்துக்குடி மாவட்டம் கோப்பையை வென்றது. எங்களது மாவட்ட கூடைப்பந்து கழகம் தொடர்ச்சியாக போட்டிகளை நடத்தி மாணவ மாணவிகளை உற்சாக உற்சாகப்படுத்தியதே அதற்கு காரணம்.
கடந்த இரண்டு வருடமாக தூத்துக்குடி மாவட்ட அளவிலான, தூத்துக்குடி மாநகர அளவிலான பள்ளி மாணவிகள் கலந்து கொள்ளும் போட்டிகளை அதிக அளவில் நடத்தி வருகிறோம்.
இதனால், சிறந்த வீரர் வீராங்கனை உருவாக்க முடிந்தது. நிறைய பள்ளிக்கூடங்களில் புதிது புதிதாக கூடைப்பந்து அணிகள் உருவானது. சிறுவர் சிறுமிகள் சிறப்பாக விளையாடுவதை பார்த்து ஸ்பான்சர்கள் தாராளமாக உதவி செய்தனர். அதனால், இந்த சாதனையை செய்ய முடிந்தது.
இந்த போட்டியில் மூலம் 5 மாணவர்கள் இரண்டு மாணவிகளும் தமிழ்நாடு அணிக்கு தேர்வு பெற்றுள்ளனர்" என்றார்.
- எஸ். அண்ணாதுரை