சென்னை; தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலராக இருப்பவர் மேகநாத ரெட்டி. இவருக்கு விராஜ் ஆருஷ் என்ற 8 வயது மகன் உள்ளார். சிறுவனான விராஜ் ஆருஷ்க்கு நீச்சலில் ஆர்வம் அதிகம்.
இந்நிலையில் நேற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நேரு உள்அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் சாதனை முயற்சி ஒன்றை விராஜ் ஆருஷ் மேற்கொண்டார். இந்நிலையில் ஆருஷ் யாருடைய உதவியும் இன்றி, எந்த விதமான நீச்சல் உபகரணங்களையும் பயன்படுத்தாமல் 54 நிமிடங்கள் 57 வினாடிகள் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்து ’நோவா’ உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
இந்த சாதனைக்கான சான்றிதழை புத்தகத்தின் நிர்வாக ஆசிரியர் ராஜ்குமார் நடராஜன் சிறுவனிடன் வழங்கினார்.
இதுகுறித்து இந்த சிறுவனின் தந்தையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலருமான மேகநாத ரெட்டி கூறியதாவது, ”நாங்கள் எங்கள் மகனுக்கு நீச்சலில் ஆர்வம் அதிகம் இருப்பதைக் கண்டறிந்தோம். மேலும்,அவருக்கு நீண்ட நேரம் நீச்சல் குளத்தில் மிதக்கும் திறமை இருப்பதை அறிந்து, அதற்கான பயிற்சிகளை வழங்கினோம். என் மனைவி தீபிகா மற்றும் பயிற்சியாளர்கள் கொடுத்த பயிற்சி மற்றும் தூண்டுதலின் பெயரில், ’நோவா’சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்” எனக் கூறினார்.
-சுரேகா எழில்