இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் இடத்தை நிரப்பப்போவது யார்
இந்திய கிரிக்கேட் அணி பல திறமையான விக்கெட் கீப்பர்களை கொண்டுள்ளது. டி20, ஒருநாள் போட்டிகளில் நிரந்தரமான விக்கெட் கீப்பர் இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நிரந்தர விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய அணி நிர்வாகம் திணறி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
டெஸ்ட் விக்கெட் கீப்பருக்கான இடம் ரிஷப் பண்ட்டிடம் இருந்தது. காயம் காரணமாக அவர் விலகியது மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அந்த இடத்தில் யார் வரப்போகிறார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் தேர்வுக்குழுவுக்கும் வந்துள்ளதாக தெரிகிறது.
ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படும் திறன் கொண்டவராக இருந்தாலும் அவரது பேட்டிங் ஃபார்ம் கவலைக்கிடமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பரத் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். விக்கெட் கீப்பிங்கில் குறை கூறுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் அவரது பேட்டிங் பேசும்படியாக இல்லை. இந்நிலையில் நாளை தொடங்கவிருக்கும் 4ஆம் டெஸ்டில் பரத்துக்கு பதிலாக இஷான் கிஷன் இடம் பெறுவார் என்று தெரிகிறது.
ஒருநாள், டி20 போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இஷான் கிஷன், டெஸ்ட் போட்டியிலும் அந்த அதிரடியை காட்டி எதிராணியினரை அச்சுறுத்துவார் என்று ரசிகர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர். டெஸ்ட் போட்டியில் பண்ட் காட்டும் அதிரடியை இந்தியா பல நாட்களாக மிஸ் செய்து வருகிறது. இஷான் கிஷன் அந்த அதிரடியை இந்திய அணிக்கு கொடுப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய விக்கெட் கீப்பர் இந்திய அணிக்கு மிக அவசியமான ஒன்று. இந்திய அணியை பொறுத்தவரை அந்த இடம் ஒரு வெற்றிடமாகவே இருக்கிறது. அந்த வெற்றிடத்தை உடனடியாக நிரப்பவில்லை எனில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பு நழுவக்கூடும்.
ராகுலா, பரத்தா இல்லை இஷான் கிஷனா??