செஸ் ஒலிம்பியாட்: பாராட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

செஸ் ஒலிம்பியாட்: பாராட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்கு பாராட்டிய பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்ததோடு இதுபோன்ற போட்டிகள் மேலும் நடத்த வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப்பிரமாண்டமாய் தொடங்கியது. இப்போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார். பத்து நாட்களுக்கும் மேல் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியானது கடந்த 9 ஆம் தேதி நிறைவு பெற்றது. இதில் இந்தியா ஓபன் பிரிவில் வெண்கல பதக்கமும், மகளிர் பிரிவில் வெண்கல பதக்கம் என 2 பதக்கங்களை வென்றது. 

இந்த நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியுள்ள தமிழ்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை   தமிழக மக்களும் அரசும்  மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “உங்கள் அன்பான பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி. விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு குணங்கள். இது போன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த தமிழகத்திற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்