எரிமலையின் சீற்றத்தைவிட அதிகமாக இருக்கிறது ஐ.பி.எல். வெப்பநிலை. அக்னி நட்சத்திரத்தை எட்டுவதற்குள்ளாகவே ஐ.பி.எல். மேகம் அனலைக் கூட்டுகிறது. பதுங்கல்களும் பாய்ச்சல்களும் பரவி வியாபித்திருந்த முதல் வாரத்தின் காட்சிப் பேழைகள்தான் இவை.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
டீமீல் கேப்டன் எய்டன் மார்க்ராம் இணைவதற்குத் தாமதமானதால், புவ்னேஷ்வரின் தலைமையில் ராஜஸ்தானை சந்தித்த சன்ரைசர்ஸை இருள் சூழ்ந்துள்ளது. 203 ரன்களை அடிக்க அனுமதித்த பௌலிங் மட்டுமல்ல… 131 ரன்களில் சுருண்ட பேட்டிங்கும் அல்லாடுகிறது. உம்ரான் மாலிக்கின் அதிவேகம், பவர்பிளேயில் விக்கெட் எடுக்கும் வாஷிங்டன் சுந்தரின் திறமை, புவ்னேஷ்வரின் ஸ்விங் மேஜிக் மற்றும் வேரியேஷன்கள் என எதுவுமே எடுபடவில்லை.
நடராஜன் மற்றும் ஆதில் ரஷித் மட்டுமே கொஞ்சமேனும் அச்சுறுத்தினர். அதேபோட்டியில் டாப் 6-ல் நான்கு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தோடே வெளியேறியிருந்தனர். முதல் தோல்வி மிகப்பெரியது. இதனால் அடிவாங்கிய ரன்ரேட்டை ஈடுகட்டவே பெரிய வெற்றிகள் தேவை. மார்க்ராமுக்கு அணியைப் புனரமைப்பதில் நிரம்பவே வேலையிருக்கிறது
டெல்லி கேப்பிடல்ஸ்
ரிஷப் பண்ட் இல்லாத பேரிழப்பானது அணியின் கட்டமைப்பிலும், ஓவர்சீஸ் வீரர்களது தேர்விலும் குழப்பம் ஏற்படுத்தும் என்பது மட்டுமே தொடர் தொடங்குவதற்கு முன் நிலவிய கருத்து. இப்போதோ அதனுடன் பேட்டிங் பரிதாபமும் சேர்ந்துகொண்டது.
டேவிட் வார்னரின் பேட்டிலிருந்து ரன்கள் வந்தாலும், அது ஒருநாள் போட்டிகளுக்குரிய வேகத்துடன் மட்டுமே வருகின்றன. சர்ஃப்ராஸ் கானின் நிலைமையும் அதுதான். அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ரிலே ரோசோ மிட்செல் மார்ஷோ அக்ஸர் படேல் அளவுகூட பேட்டிங்கில் பங்களிப்பதில்லை. வேகப்பந்துவீச்சும்கூட நார்க்கியாவையே பெரிதும் நம்பியிருக்கிறது. குறைந்தபட்சம் பேட்டிங்கையேனும் பலப்படுத்தாவிட்டால் தொடர் தோல்வியே தொடர்கதையாகும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
தாக்கூரின் `லார்ட்' அவதாரம் கே.கே.ஆருக்கு யானை பலம். கடந்த சீசன்களில் பவர்பிளேயில் ரன் சேர்ப்பதில் ஏற்பட்ட தொய்வை சரிசெய்ய ரஹ்மனுல்லா குர்பாஸ், லிட்டன் தாஸை ஓப்பனர் இருக்கைக்காக ஏலத்தில் வாங்கி வைத்தனர்.
ஷகீப் அல் ஹாசனுக்கு பதிலாக பாகிஸ்தான் ப்ரீமியர் லீக்கில் நன்றாக ஆடியவர் என்பதை மனதில் வைத்து தற்சமயம் ஜேசன் ராயையும் எடுத்துள்ளனர். ஆக ஜேசன்தான் தொடங்குவார் என்றாலும், கேப்டன் ராணாவுக்கு பல ஆப்சன்களும் கைவசம் உள்ளன. மிஸ்ட்ரி ஸ்பின்னராக சுழன்று அடித்த 19 வயது சுயாஸ் ஷர்மா கூக்ளிகள் மூலமாக பேட்ஸ்மேன்களைக் கலங்கடித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏற்கனவே சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தியோடு பலமாய் உள்ள ஸ்பின் படை இன்னமும் வலுப்பெற்றுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ்
டீமில் க்விண்டன் டீ காக் இணைவதற்கு ஏற்பட்ட தாமதத்தை கைல் மேயர்ஸைக் கொண்டு சரிசெய்ய லக்னோ முற்பட, அவரோ இப்போது டீ காக் இணைந்தாலும் தவிர்க்க முடியாத தேர்வாகிவிட்டார். நிக்கோலஸ் பூரணும் சிறப்பாக ஆடுவது கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்த நிர்வாகத்தின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது. ஐந்து விக்கெட் ஹாலினைப் பதிவேற்றி அணியை வெல்ல வைத்த மார்க் உட்டின் அதிவேகம் மிரட்டுகிறது. மற்றபடி மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணால் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் இன்னமும் மிளிரத் தொடங்கவில்லை.
சி.எஸ்.கே-வுக்கு எதிரான போட்டியில் கே.எல். ராகுலின் கேப்டன்ஸியில் தெரிந்த குறைபாடுகள் பேட்ஸ்மேனாக மட்டுமன்றி கேப்டனாகவும் பின்னடைவுகளை அவர் சந்திப்பதையே கோடிட்டுக் காட்டியது.
பஞ்சாப் கிங்ஸ்
வென்ற முதல் இரு போட்டிகளிலுமே பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் தங்கள் அணியை 190 ரன்களைத் தாண்ட வைத்திருந்தனர். ஷிகார் தவான் - பிரப்சிம்ரன் கூட்டணி ஓப்பனர்களாக சிறப்பாகவே தொடங்கியிருந்தது. தவான் தொடக்கத்தில் மெதுவாக ரன் சேர்க்கிறார் என்பது பற்றி விமர்சனங்கள் வந்தாலும் அதன்பின் முடுக்கிவிட்டு ஸ்ட்ரைக் ரேட்டை ஏற்றிவிடுகிறார்.
அர்ஷ்தீப் சிங் மற்றும் நாதன் எல்லீஸ் விக்கெட் டேக்கிங் பௌலர்களாக மிளிருவது மட்டுமின்றி சாம் கரண், சிக்கந்தர் ரசா, ராகுல் சஹார் என விதவிதமான பௌலர்களும் ஏகப்பட்ட பௌலிங் ஆப்சன்களும் பஞ்சாப்பின் பௌலிங் படைக்கு பலம்சேர்த்து வருகின்றன.பஞ்சாப்பின் பௌலிங் படைக்கு பலம்சேர்த்து வருகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ்
கோப்பை வெல்லும் அமைப்பிருப்பினும் சற்றே தனது பேட்டிங் ஆர்டரில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டிய கட்டாயம் ராஜஸ்தானுக்கு உள்ளது. தேவ்தத் படிக்கல்லின் குறைவான ஸ்ட்ரைக்ரேட்டும் பஞ்சாப்புக்கு எதிரான தோல்விக்கான முக்கியக் காரணம்.
அதிவேகமாய் ரன் சேர்க்கும் ஹெட்மயரை முன்கூட்டி இறக்கி இன்னமும் சில பந்துகளை அவரை சந்திக்க வைப்பதுவும் ரன் அக்கவுன்ட்டில் அதிகமாக வரவுவைக்க உதவும். பவர்பிளேயில் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்கத் தவறும் போட்டிகளில் எல்லாம் அதன்பின் தள்ளாடுவது ராஜஸ்தானின் நிரந்தர வாடிக்கையாகிவிட்டது. அந்தத் தவறும் நேர்செய்யப்பட வேண்டும்.
குஜராத் டைட்டன்ஸ்
இன்னொரு கோப்பைக்கான உத்தரவாதம் போலவேதான் இருந்தது குஜராத்தின் முதல் இரண்டு வெற்றிகளும். சுப்மன் கில், சாய் சுதர்சன் என இளைஞர்கள் மட்டுமல்ல... மொகம்மத் ஷமி, விருத்திமான் சாஹா போன்ற அனுபவம் மிக்க வீரர்களும் அவரவர் பாத்திரத்தில் பொருந்திப் போகிறார்கள். ஷமி பவர்பிளேயில் விக்கெட் எடுத்து அணியை முன்னிலைப்படுத்த தவறுவதில்லை.
டொமெஸ்டிக் ஃபார்மட் ஃபார்மினை இங்கேயும் நீளச்செய்யும் விஜய் ஷங்கர் வரை அணிக்கு ஒவ்வொருவரிடமிருந்தும் ஏதோவொரு பங்களிப்பு கிடைக்கிறது. கேப்டனாக அதே கூலான பாணியில் அணியை வழிநடத்தினாலும் வீரராக பாண்டியாவிடமிருந்து அந்த முப்பரிமாணம் இன்னமும் வெளிப்படவில்லை. கேன் வில்லியம்சன் காயத்தால் விலகியிருப்பது அணிக்கு இழப்புதான்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
முதல் போட்டியின் முடிவுகள், வசந்தகாலத்தின் தொடக்கம் போலவே இருந்தது. கடந்த சீசனில் ஒட்டாமல் பயணித்துக் கொண்டிருந்த கோலி – டூ ப்ளஸ்ஸிஸ் ஓப்பனிங் இந்த சீசனில் அப்டேட்டட் வெர்ஷனாகத் திரும்பி மும்பை இந்தியன்ஸை புரட்டிப்போட்டு அடித்தது. ஃபீல்டிங்கில்கூட தனித்தன்மை காட்டினர். ரீஸ் டாப் லீயின் டாப் கிளாஸ் ஸ்பெல், சிராஜின் மிரட்டல் விடுத்த பவர் பிளே, மைக்கேல் பிரேஸ்வெல்லின் நம்பிக்கை தரும் தொடக்கம் என எல்லாமே நேர்மறையாகவும் ஹர்சல் படேலின் பந்துவீச்சு மட்டுமே சற்றே அணியை பின்னடைவைச் சந்திக்க வைப்பதாகவும் இருந்தது. ஆனால், கே.கே.ஆருக்கு எதிரான இரண்டாவது போட்டியோ `விண்டேஜ் ஆர்.சி.பி. இஸ் பேக்' என சொல்ல வைத்துவிட்டனர். இரு போட்டிகளிலுமே டெத் ஓவர் பௌலிங் பரிதாபகரமாக இருந்தது.
மும்பைக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்களில் 116 ரன்களை வாரி வழங்கியிருந்தனர். இரண்டாவது போட்டியிலோ 125 ரன்கள் மின்னல் வேகத்தில் 10 ஓவர்களில் தரப்பட்டிருந்தது. டெத் ஓவர் பலவீனமும் ஆர்.சி.பி-யும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாகவே காலங்காலமாகப் பயணிக்கின்றன. அடுத்தடுத்த போட்டிகளில் எதிரணிகள் இதை மனதில் வைத்து இறுதி ஓவர்களில் ஆர்.சி.பி. பௌலர்களைக் குறிவைத்தால் நிலை கவலைக்கிடமாகும். பேட்டிங்கின் போதும் 4 ஓவர்களில் 42/0 ஆக மரணபயம் காட்டி பிறகு தலைகீழாக 123-க்கு ஆல்அவுட் ஆவதெல்லாம் ஆர்.சி.பிக்கே கைவந்த கலை.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஆரஞ்சுக் கேப்பினை அடையுமளவு மட்டுமன்றி, இந்திய ஜெர்ஸியையே கையகப்படுத்தும் அளவுக்கு உள்ளது ருத்துராஜ் கெய்க்வாட்டின் உக்கிரமான ஃபார்ம். சேப்பாக்கம் தங்களது கோட்டை என ஸ்பின்னால் வெல்லும் சூத்திரத்தால் நிருபித்த தோனி, சிக்ஸர்களால் அவருள்ளிருந்த ஆரம்பகால ஃபினிஷரை வெளிப்படுத்துகிறார். ஆனால், டெத்ஓவர் பௌலிங் மட்டுமல்ல… ஒட்டுமொத்த வேகப்பந்து வீச்சுமே டெத் பெட்டில் இருக்கிறது.
முதல் போட்டியில் ருத்துராஜ் தவிர்த்த பேட்ஸ்மேன்கள் டிஃபெண்ட் செய்யுமளவு ரன்களைக் கொடுக்கவில்லை, இரண்டாவது போட்டியில் 217-ஐ கொடுத்தும் 12 ரன்கள் வித்தியாசத்தில்தான் வெற்றிகிட்டியது. 11-க்கும் அதிகமான எக்கானமி மட்டுமல்ல பிரச்னை, லைன் அண்ட் லென்த் பிறழுவதால் எக்ஸ்ட்ராக்கள் எகிறுவதுமே சிக்கல்தான். சமீபத்தில் சூப்பர் ஓவரில் சூப்பர்மேனாகிய தீக்ஷனா, சிஸாண்டா மகாலா விரைவில் இணைவது மட்டுமே ஒரே தீர்வு.
திரைப்பட வரிசைபோல, பங்குச்சந்தை நிலவரம்போல இது முதல்வார முடிவுகளே. களம் மாற மாற அது வீரர்களுக்குப் பழகப் பழக, புதுப் புது திட்டங்களும் தந்திரோபாயங்களும் வகுக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கையில் வேட்பாளர்களின் நிலைபோல இதுவும் மாறிக்கொண்டே இருக்கும். வீழ்ச்சி கண்ட அணி வேங்கையாய் வேட்கையுடன் வேகமெடுக்கலாம், வென்ற அணிகளும் காட்சி மாறி நிலைதடுமாறலாம்.
கோப்பையை நோக்கி நீளும் மேப் வேண்டுமெனில் இரு பரிமாணத்தில் ஏற்ற இறக்கம் இன்றி இருக்கும். ஆனால் பாதைகள் அப்படியிருக்க வாய்ப்பில்லைதானே?
-அய்யப்பன்