12 மணிநேர வேலை மசோதா வாபஸ்: ‘கொடூரச் சட்டத்தை கொண்டு வந்துவிட்டு சமாளிக்கின்றனர்’- டி.டி.வி தினகரன் சாடல்

12 மணி நேர வேலை மசோதாவை வாபஸ் பெற்ற நிலையில், கொடூரச் சட்டத்தை கொண்டு வந்துவிட்டு சமாளிக்கிறார்கள என திமுகவை டிடிவி தினகரன் சாடி உள்ளார்.
12 மணிநேர வேலை மசோதா வாபஸ்: ‘கொடூரச் சட்டத்தை கொண்டு வந்துவிட்டு சமாளிக்கின்றனர்’- டி.டி.வி தினகரன் சாடல்

தி.மு.க ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவது காலத்தின் கட்டாயம் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மே தின பொதுக்கூட்டத்தில் பேசிய டி.டி.வி தினகரன், ”நினைத்தே பார்க்க முடியாத கொடூர சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டு அதைத் திரும்பப் பெறுவதில் எங்களுக்கு ஒன்றும் வருத்தம் இல்லை. நாங்கள் விட்டுக்கொடுப்போம் என முதலமைச்சர் கூறுகிறார்.எதை விட்டுக்கொடுப்பேன் என்று கூறுகிறார்.

பல்வேறு போராட்டங்கள், பல உயிர்களை இழந்து பெற்ற 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரம் என சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டு, அதைச் சமாளிப்பதற்குப் பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்.

மேலும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவின் கட்சியும், எம்.ஜி.ஆரின் சின்னமும் எடப்பாடி பழனிசாமி கையில் மாட்டிக்கொண்டிருக்கிறது என்ற ஆணவத்தால் அவர்கள் போடும் ஆட்டத்தால் மு.க.ஸ்டாலின் தலைகால் புரியாமல் செயல்படுகிறார்.

மக்கள் விரோத அறிவிப்புகளை இந்த ஆட்சியர்கள் தொடர்ந்து வெளியிடுகின்றனர். பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பிய பிறகு பெருந்தன்மையாகப் பின்வாங்குவதுமாக பாசாங்கு செய்கின்றனர்.

மொத்தத்தில் தி.மு.க ஆட்சி பேச்சு ஒன்றாகவும், செயல் ஒன்றாகவும் இருக்கிறது. இந்த ஆட்சி முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது. அதைத் தமிழ்நாட்டு மக்கள் செய்து முடிப்பார்கள்.

தமிழ்நாட்டின் நிதி அமைச்சராக இருப்பவர் சொல்வது போல ஒரு குடும்பத்தின் கையில் 30,000 கோடி ரூபாய் இருப்பதாகச் சர்ச்சை ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோ கேசட்டின் உண்மை தன்மை அறிந்தால் நிச்சயம் உண்மைகள் வெளிப்படும் என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com