திருச்செந்தூர் கோயிலில் கட்டபொம்மன் வழங்கிய மணி ஒலிக்குமா? கோயில் நிர்வாகத்தின் விளக்கம் என்ன?

கோயிலில் உச்சி கால பூஜை நடக்கும்போது இந்த மணி ஒழிப்பது வழக்கம்.
திருச்செந்தூர் கோயிலில் கட்டபொம்மன் வழங்கிய மணி ஒலிக்குமா? கோயில் நிர்வாகத்தின் விளக்கம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாக முருக பக்தர்களால் பார்க்கப்படுகிறது. இந்த கோயில் கோபுரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி கட்டப்பட்டுள்ளது. கோயிலில் உச்சி கால பூஜை நடக்கும்போது இந்த மணி ஒழிப்பது வழக்கம்.

சமீப காலமாக இந்த மணி ஒலிக்கச் செய்வதில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையரிடம் ஒரு மனுவை கொடுத்துள்ளார். அதில் "வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி கோவில் உச்சி கால பூஜையின் போது ஒலிக்கும். ஆனால், சமீப காலமாக அந்த மணியை அடிப்பதில்லை. எனவே மீண்டும் அந்த மணியை அடித்து ஒலிக்க செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி, வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் உள்ள வீரசக்க தேவி கோயில் கமிட்டி தலைவர் முருகபூபதியிடம் கேட்டோம். "வீரபாண்டிய கட்டபொம்மன் மன்னராக இருந்த காலத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மிகப்பெரிய ஆலய மணியை வழங்கி உள்ளார். அந்த மணி கோயில் கோபுரத்தில் இருக்கிறது. கோயிலில் நடைபெறும் முக்கிய பூஜைகளின் போது அந்த மணி அடிப்பது வழக்கம். அந்த மணி அடிக்கும் சத்தம் பாஞ்சாலங்குறிச்சிக்கு கேட்க வேண்டும். அந்த மணி சத்தத்தை கேட்டு கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியில் பூஜை செய்வது வழக்கம்.

அதற்காக ஆறுமுகநேரி, ஆத்தூர், முக்காணி, பழைய காயல் என்று எட்டு இடங்களில் மணிமண்டபம் கட்டி மணியை ஒழிக்க செய்து இருக்கிறார். திருச்செந்தூரில் மணி ஒலித்ததும் தொடர்ந்து இந்த மணி மண்டபங்களில் மணி ஒலிக்கும். அதைக் கேட்டு கட்டபொம்மன் பூஜை செய்வார் என்பது வரலாறு. ஆனால், காலப்போக்கில் இந்த மரபு முறை ஒழிக்கப்பட்டு விட்டது. கட்டபொம்மன் கட்டிய மணிமண்டபங்கள் தனிநபர்களால் ஆக்ரமிக்கப்பட்டு விட்டது. ஆத்தூரில் மட்டும் சாட்சியாக ஒரு மணிமண்டபம் இன்னமும் இருக்கிறது.

திருச்செந்தூர் கோயிலை பொருத்தவரை பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டபொம்மன் வழங்கிய மணி அடிக்கப்பட்டது. பிறகு நிறுத்தப்பட்டது. மீண்டும் மணி ஒலிக்கச் செய்ய மக்கள் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து மீண்டும் மணி ஒலித்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த மணியை யாரும் பயன்படுத்துவதில்லை. கேட்டால், அது மிகப் பெரிய மணி. அதை அடித்தால் கோபுரம் அதிர்கிறது என்கிறார்கள்.

ஆனாலும் வரலாறு மறைக்கப்பட்டு விடக்கூடாது. கட்டபொம்மனின் சாதனைகள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். எனவே கோவில் கோபுரத்தில் கட்டப்பட்டிருக்கும் மணி மீண்டும் ஒழிக்க வேண்டும்" என்பது எங்கள் கோரிக்கை என்றார். கோவில் நிர்வாகமோ, "தமிழ்நாடு நுகர்வோர் பேரவை இப்போதுதான் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறது. கட்டபொம்மனின் சந்ததியினரும் கேட்கிறார்கள். அவர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்" என்கிறார்கள்.

-எஸ்.அண்ணாதுரை

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com