கோயமுத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சு.முத்துசாமிக்கு கோவை மண்ணில் ஆரம்பமே ஒரு தினுஷாகதான் இருக்கிறது. வால்பாறையில் வெள்ளப் பாதிப்பு தடுப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்துவிட்டு வந்தவர் ஆன் தி வேயில் மலைப்பாதையில் குரங்குகளுக்கு வாழைப்பழம் கொடுத்தார். அதில் ஒரு குரங்கு உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொள்ள, அமைச்சரின் விரலில் சிறு காயம். பின் பொள்ளாச்சி அருகே கட்சிக்கார் ஒருவரின் வீட்டில் அமர்ந்து, டாக்டரை வரவைத்து ஊசி போட்டுக்கொண்டு பணிகளை தொடர்ந்தார்.
குரங்காரின் செயலால் எந்த பாதிப்புமில்லை என்றாலுமே கூட, ‘என்னாங்கடா இது ஓப்பனிங்கே ஒரு மார்க்கமா இருக்குதே’என்று டவுட்டோடுதான் பொறுப்பாளர் வேலைகளை பொறுப்பாகத் துவக்கினார். அமைச்சர் சு.மு.வுக்கு கோவை அப்படியொன்றும் சுமூகமாக இருக்காது என்பது உலகமறிந்த ரகசியம்தான். காரணம் இப்ப அவரு ஒக்காந்து இருக்குற சேர்ல மொதல்ல ஒக்காந்திருந்தது செந்தில்பாலாஜியாச்சே! மனுஷன் என்னென்ன அக்குறும்புகளையெல்லாம் பண்ணி வெச்சிருப்பார்னு யோசிச்சாலே தல கிர்ர்ர்ர்ருன்னு ஆயிடும்.
முத்துசாமி நினைச்சது போலவே செம்ம சவாலாக இருக்குது கோவை. மற்ற அமைச்சர்களுக்கெல்லாம் ஒண்ணு கட்சிக்காரன் பஞ்சாயத்த தீர்க்கோணும். இல்லேன்னா மக்கள் பிரச்னைக்கு தீர்வு சொல்லோணும். ஆனால் நம்ம சு.மு.வுக்கோ ரெண்டுமே சேர்ந்து டார்ச்சர கொடுக்குது. ஆட்சி அமைஞ்சு ரெண்டு வருஷத்துக்கு மேலாச்சு. கோவையில ஆளுங்கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட கிடையாது. அதனால சொந்த அமைச்சர் யாரும் கிடையாது. மொதல்ல நியமிக்கப்பட்ட சக்கரபாணி, ராமச்சந்திரன் ரெண்டு பேர் மேலேயும் முதல்வருக்கு திருப்தி இல்லாம போச்சு. அவங்களுக்கு மாற்றாகதான் வந்தமர்ந்தார் செந்தில் பாலாஜி. ச்சும்மா சொல்ல கூடாது, மனுஷன் மெரட்டுனாப்ல.
டுட்டோரியல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மாதிரி எப்பவாச்சும் கட்சி ஆபீஸ் பக்கம் வந்து போயிட்டிருந்த கோவை மாவட்ட தி.மு.க-வினரை தினமும் அலுவலகம் வந்து ரெஜிஸ்டர்ல கையெழுத்து போட சொல்ற அளவுக்கு ஸ்ட்ரிக்ட் ஆக்கினார். அதோட விளைவை வெண்ணிற ஆடை மூர்த்தி ஸ்டைல்ல சொல்றதுன்னா… அவரு போட்டு வெரட்டு வெரட்டுன கட்சி கபால்னு ஏந்திரிச்சு ஒக்காந்துச்சு! கோவையில.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்ல கோவையில தி.மு.க வூடுகட்டி ஜெயிக்க ஒரே காரணம் செந்திலின் ராசதந்திரங்களும், கொலுசு மற்றும் பிரியாணி பொட்டலங்களும்தான். கட்சியை தேர்தல்ல ஜெயிக்க வெச்சாரே, மக்கள் மனசுல உட்கார வெச்சாரா? அப்படின்னு இந்த இடத்துல நீங்க கேட்கணும். நீங்க கேட்கலேண்ணாலும் நாங்க சொல்லுவோம்.
தி.மு.க-வை மக்கள் மத்தியில் மட்டுமில்லை, அதே கட்சிக்காரன் மனதில் கூட உட்கார வைக்கவில்லை செந்திலு. பரம்பரையா தி.மு.க-வுக்கு உழைச்சு கொட்டினவங்களை ஓரங்கட்டிட்டு அ.தி.மு.க-வுல ஒரு காலத்துல கோலோச்சிட்டு, அப்புறமா கட்டங்கட்டப்பட்ட நபர்களை கூட்டியாந்து, பெரிய பதவிகளை கொடுத்து ஆடவிட்டார் செந்தில். இதில் கடுப்பான தி.மு.க விசுவாசிகள் திரும்பி நின்று கொண்டார்கள். ஆனால், பெரிய உழைப்பும், கட்சிக்காரர்கள் மத்தியில் ஈர்ப்பும் இல்லாமல் கோவை தி.மு.க-வின் பெரிய பொறுப்புகளுக்கு கொண்டு வரப்பட்ட நபர்களை அந்த கட்சியினரும் விரும்பவில்லை, மக்களும் ரசிக்கவில்லை.
இது மட்டுமில்லை கொங்கு மண்டலத்தின் தலைநகராக இருப்பது கோயமுத்தூர். சென்னைக்கு நிகரான கெத்து உடையது. அந்த கொங்கு மண்டலத்தின் ஒரு சின்ன மாவட்டம் தான் கரூர். ஆனால் அம்மாம் பெரிய கோவையை ‘சின்ன கரூர்’என்று அழைக்குமளவுக்கு தன் சொந்த மாவட்டமான கரூரில் இருந்து தனது ஆதரவாளர்களை இங்கே இறக்குமதி செய்தார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் துவங்கி வட்டிக்கு கடன் கொடுப்பது வரை கோவை முழுக்க பாலாஜியின் அடிப்பொடிகள் வியாபித்து பரவினர்.
டாஸ்மாக் பார்களை கண்ட்ரோல் பண்ணுவது, கவர்மெண்ட் காண்ட்ராக்ட்களில் கபடி ஆடுவது என்று எல்லாமே அவர்களின் கைகளுக்குப் போனது. தி.மு.க-வினர் கைகட்டி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. சிலர் மட்டும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டீர் மிஸ்டர் பாலாஜி?’என்று அமைச்சரை சோஷியல் மீடியாவில் விளாசினர். ஆனால் நோ யூஸ்.
ஆட்சியின் இரண்டு ஆண்டு பிளஸ் காலத்தில் கோவை சிட்டி மட்டுமல்ல மாவட்டம் முழுக்க சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு திட்டமும் நிறைவேறவில்லை. அ.தி.மு.க காலத்தில் துவக்கப்பட்ட பாலங்களில் சிலவற்றுக்கு ரிப்பன் வெட்டியதோடு சரி. மற்றபடி பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை. ஆனால் பேய்த்தனமாக பிய்த்துப் பிடுங்கப்பட்ட சாலைகள், குடிநீரே வராத கார்ப்பரேஷன் குழாய், வற்றாத மினி கூவங்களாக சாக்கடைகள், அள்ளவே படாத குப்பை என்று அசிங்கப்படுகிறது மாநகராட்சி. மாவட்டத்தின் பல இடங்களின் நிலை இதுதான். இதனால் ஆளுங்கட்சியான தி.மு.க மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் மக்கள்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய சவாலாக இது தி.மு.க-வுக்கு இருக்கப் போகிறது. ஆனால் இதை சரிகட்ட வேண்டிய பெரிய பொறுப்பு சு.முத்துசாமியின் தலையில் விழுந்துள்ளது. மக்கள் பிரச்னைக்கு அவர் பதில் சொல்வதற்குள் ‘கால் நூற்றாண்டு கழக விசுவாசி நான். ஆனால் என்னை தெருவில் நிற்க விட்டுட்டு, நேத்து அ.தி.மு.க-வுல இருந்து வந்தவரை மாநில நிர்வாகியாக்கியிருக்காங்க. இதை உடனே சரிகட்டுங்க அமைச்சரே’என்று ஆரம்பித்து பல வகை குறைகளை சொல்லி நெருக்கித்தள்ளும் கட்சி நிர்வாகிகள் மறுபுறம்.
இப்படியாக கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறார் முத்துசாமி. கோவைக்கு அடுத்து இருக்கும் திருப்பூரில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சாமிநாதன் எனும் சீனியர், முத்துசாமியை விட வயது குறைந்தவர். ஆனால் அவரை விட்டுட்டு திருப்பூர் தாண்டி இருக்கும் ஈரோட்டை சேர்ந்த சீனியர் மோஸ்ட் சு.மு.வை முதல்வர், கோவை பொறுப்பாளராக நியமித்துள்ளார் என்றால் அதில் ஆயிரத்தெட்டு காரணங்கள், அர்த்தங்கள் உள்ளன.
குறிப்பாக கோவையில் கட்சியை நிலை நிறுத்திட அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதை இவர் செய்வாரா? என்பதுதான் டவுட்டே. ஈரோடு தி.மு.க-வினருக்கு போன் போடும் கோவை தி.மு.க-வினர் ‘ஏனுங்ணா உங்காளு அள்ளி விடுவாரா?’என்று கேட்க, எதிர் முனையில் மெளனமே பல நேரங்களில் பதிலாம். ஆக கோவை தி.மு.க-வினரின் ‘கையில காசு’எனும் எதிர்பார்ப்பு அம்பேல்தான்! என்கிறார்கள். ஆனாலும் அடங்காமல் அமைச்சரை பல கோரிக்கைகளை நிறைவேற்றித் தரச்சொல்லி நெருக்கடி தந்து கொண்டே உள்ளனர்.
இதற்கிடையில் கோவை மாவட்ட ஆய்வுப் பணிக்காக முதல்வர் ஸ்டாலின் விரைவில் வருகிறார். பொறுப்பு அமைச்சர் பதவியில் செந்தில்பாலாஜி அமர்ந்த பின், முதல்வர் கோவைக்கு வரும்போதெல்லாம் ஏதோ மாநாடுக்கு அவர் வருகையில் வரவேற்பது போல் மெகா தடபுடலாக வரவேற்பு கொடுப்பார். மயிலாட்டம், ஒயிலாட்டம் என கோவையே அமர்க்களப்படும்.
கோவையில் முதல்வர் துவங்கி வைக்கும் திட்ட மதிப்பில் கிட்டத்தட்ட கால் வாசிக்கு நிகரான தொகை அவரது வரவேற்புக்கே செலவு செய்வார் பாலாஜி. இப்போது அவர் இடத்தில் வந்து அமர்ந்திருக்கும் நிலையில் சு.மு. எப்படி முதல்வரை வரவேற்கப்போகிறார் என்பதில் தெரிந்துவிடும் அவரது நிலைப்பாடு!
-ஷக்தி