கர்நாடக முதல்வர் பதவி யாருக்கு? : விடிய விடிய ஆலோசனை - இன்று வெளியாகிறதா அறிவிப்பு?

பதவி ஏற்பு விழாவை வருகிற 18-ந் தேதி நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் படம்; டி.கே.சிவகுமார், இரண்டாவது படம்; மல்லிகார்ஜூன கார்கே, மூன்றாவது படம்; சித்தராமையா
முதல் படம்; டி.கே.சிவகுமார், இரண்டாவது படம்; மல்லிகார்ஜூன கார்கே, மூன்றாவது படம்; சித்தராமையா

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுயடுத்து முதல்வர் பதவி யாருக்கு என்பதில் டி.கே சிவக்குமாருக்கும் சித்தராமையாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இன்று யார் முதல்வர் என்பது தெரியவரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றிக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இருவருமே கடுமையாக உழைத்துள்ளனர். இதனால் முதலமைச்சர் பதவிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், கர்நாடக புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் வகையில் நேற்று முந்தினம் ஏம்.எல்.ஏ.க்கள் தீர்மான கூட்டம் நடத்தப்பட்டது. அதில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடத்துக்கு வழங்கி ஒரு வரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் கருத்து கேட்பு நடைபெற்றது. அதில் பகிரங்கமாக கருத்து சொல்ல விரும்பாத எம்.எல்.ஏ.க்களுக்கு தனியாக ஒரு பெட்டி வைத்து சீட்டில் எழுதி போட அறிவுறுத்தப்பட்டது. இந்த கருத்துகளை ஒருங்கிணைத்து அறிக்கையாக தயாரித்த மேலிட பார்வையாளர்கள் அதை நேற்று டெல்லிக்கு கொண்டு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயிடம் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் புதிய முதலமைச்சர் பதவி யாருக்கு என காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளது.

பெரும்பான்மையானோர் சித்தராமையாவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சித்தராமையா நேற்று மதியம் 1 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகன் யதீந்திரா மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களும் சென்றனர். டி.கே.சிவகுமாருக்கும் டெல்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பேரில் நேற்று டெல்லி செல்லவிருந்த டி.கே.சிவகுமார் இறுதியில் தனது பயணத்தை ரத்து செய்து விட்டார். சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி உறுதியாகி இருப்பது தான் அதற்கு காரணம் எனவும் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் இன்று டி.கே.சிவகுமார் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக அரசியலை பொறுத்த வரையில் காங்கிரசில் டி.கே.சிவகுமார், சித்தராமையா இருவருமே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இருவருக்குமே மக்கள் செல்வாக்கும் பெரும்பான்மை ஆதரவும் இருக்கிறது. இருவருமே பதவிக்கு போட்டியிடுவதால் யாரை ஆட்சியில் அமர வைப்பது என்று முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்ததாகவும், இந்த ஆலோசனை கூட்டம் விடியவிடிய நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் மேலிடம் புதிய முதல்வர் யார் என்பதை இன்று அறிவிக்க உள்ளதாகவும், பதவி ஏற்பு விழாவை வருகிற 18-ந் தேதி நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com