முதல்வர் பதவி யாருக்கு? தலைமை முடிவெடுக்கும் - டி.கே சிவக்குமார்; டெல்லி விரையும் சித்தராமையா
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுயடுத்து முதல்வர் பதவி யாருக்கு என்பதில் டி.கே சிவக்குமாருக்கும் சித்தராமையாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அதனை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இருவருமே கடுமையாக உழைத்துள்ளனர். அதன் பலனாக இருவருமே அவரவர் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதோடு கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை வளர்த்து வெற்றியின் பாதைக்கு வித்திட்ட பெருமை இவர்கள் இருவருக்குமே உண்டு.
இதனால் முதலமைச்சர் பதவிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், கர்நாடக புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் வகையில் ஏம்.எல்.ஏ.க்கள் தீர்மான கூட்டம் நடத்தப்பட்டது. அதில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடத்துக்கு வழங்கி தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக புதிய முதல்வரை தேர்வு செய்வது பற்றி டி.கே.சிவகுமார் கூறும் போது, ”நான் டெல்லி செல்லவில்லை, இன்று எனக்கு பிறந்தநாள் என்பதால் விழாக்கள், பூஜைகளில் பங்கேற்கபதற்காக பெங்களூருவில் இருக்கிறேன். என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்துவிட்டேன், முதலமைச்சர் யார் என்ற முடிவை தலைமையிடம் விட்டுவிட்டேன், அவர்கள் முடிவெடுப்பார்கள் ” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முன்னாள் முதலமைச்சரான சித்தராமையா டெல்லிக்கு விரைகிறார். முன்னதாக, ”எனது தந்தையே முதலமைச்சராக பதவியேற்பார்” என சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் இருவருக்கும் இடையே நிலவும் போட்டிக்கு மத்தியில் சித்தராமையாவின் டெல்லி பயணம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.