சமூக வலைதளத்தில் மதபோதகர் குறித்து அவதூறு வீடியோ பரப்பிய வழக்கில் சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கன்னண் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம், திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஆஸ்டின் பெனட் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநிலச் செயலாளாராக இருக்கிறார் கனல் கண்ணன். அண்மையில் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில் கிறிஸ்துவ மதபோதகர் உடையில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இளம்பெண்ணுடன் நடனமாடுவதாகவும், பின்னணியில் தமிழ் இசைப்பாடல் ஒலிப்பதாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை பகுதியை சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஆஸ்டின் பெனட் நாகர்கோவில் சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில், கனல் கண்ணன் அவதூறாக வீடியோ வெளியிட்டுள்ளதை குறிப்பிட்டு புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீஸார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக நேற்று கனல் கண்ணனை சைபர் க்ரைம் போலீஸார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். தனது ஆதரவாளர்களுடன் அவர் காவல் நிலையம் சென்றிருந்தார். அப்போது உணவருந்த வெளியே அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டி கனல் கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே, ட்விட்டர் சர்ச்சை பதிவு வழக்கை முன்னிறுத்தி கனல் கண்ணனை கைது செய்வதாக போலீஸார் அறிவித்தனர். பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பதிவு வெளியிட்டது உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது.