தமிழக அமைச்சரவையில் நாசர் நீக்கத்தை வரவேற்கிறோம், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நீக்கத்தை எதிர்க்கிறோம் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றப்பட்டது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், 'தமிழக அமைச்சரவையிலிருந்து நாசரை நீக்கியதற்கு தமிழக பா.ஜ.க. வரவேற்பு தெரிவிக்கிறது. காரணம், கடந்த பிப்ரவரி மாதம் பாலில் உள்ள பச்சை நிற பாக்கெட்டில் பாலின் கொழுப்பு அளவை குறைத்துவிட்டு, அதை மறுத்தார். எனவே, மாற்றிப்பேசும் நாசரின் மாற்றத்தை வரவேற்கிறோம்.
அதேவேளையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செயல்படுகிறார் என கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது, மாற்றவேண்டிய அவசியம் என்ன? திராவிட மாடல் அரசின் பிராண்ட் அம்பாசிடர் பி.டி.ஆரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? ஆடியோ பிரச்சனையால்தான் அவரை மாற்றியுள்ளனர்.
டி.ஆர். பி.ராஜா குடும்பம் அனைத்து தொழில்களிலும் கொடிகட்டி பறந்து வருகிறார்கள். அப்படி இருக்கையில், எந்த அடிப்படையில் தொழிற்துறையை அவருக்கு கொடுத்தார்கள்? என தெரிவில்லை.
டி.ஆர்.பி. ராஜா, சாராய ஆலை வைத்துள்ளனர். அவரால் தொழில்துறையில் திறம்பட பணியாற்ற முடியுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதன் மூலம் தி.மு.க அரசில் சாராய உற்பத்தி, விற்பனை அனைத்தையும் தங்கள் கையில் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்' என குற்றம் சாட்டினார்.
மேலும், 'அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியது, பல்வேறு ஊழல்களை செய்தது என டி.ஆர்.பாலு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளது. அப்படிப்பட்ட டி.ஆர்.பாலு என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது' நகைப்பிற்குரியது என்றார்.