மேற்கு வங்க மாநிலத்தில் டைமண்ட் துறைமுக பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் குண்டுவீச்சு நம்பவம் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட வன்முறையில் 15க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது வாக்கு எண்ணும் மையம் முன் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில பஞ்சாயத்துத் தேர்தல் பெரும் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்ததை அடுத்த, இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சனிக்கிழமை மொத்தம் 61,636 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், கள்ள ஓட்டு மற்றும் வன்முறை காரணமாக திங்கட்கிழமை 697 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடந்தது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கு இடையேயான கடும் போட்டி நிலவும் சூழலில் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் கவனம் பெற்றுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் மாநிலம் முழுவதும் நடந்துவரும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.
இதனால், இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறுகிறது. மத்திய படைகள் மற்றும் மாநில காவல்துறை தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மத்திய படைகள் குவிக்கப்பட்டு, சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் டைமண்ட் துறைமுக பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் குண்டுவீச்சு நம்பவம் நடைபெற்றது.