8-வது நாள் பாதயாத்திரை: மதுரை மேலூரில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு - முழு விவரம்

இந்த நடைபயணம் கடந்த மாதம் 28-ம் தேதி மாலை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கியது
நடைபயணத்தில் அண்ணாமலை
நடைபயணத்தில் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள, ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தின் 8-வது நாளான இன்று மதுரை மாவட்டம் மேலூரில் பொது மக்களைச் உற்சாகத்துடன் சந்தித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவை பலப்படுத்தும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொநம்டு வருகிறார். "என் மண், என் மக்கள்" என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள உள்ள இந்த நடைபயணம் கடந்த மாதம் 28-ம் தேதி மாலை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கியது. இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை கிராமங்களின் தாய் கிராமமான மேலூரில், இன்று "என் மண், என் மக்கள்" பயணம் சிறப்புற நடைபெற்றது. தலைசிறந்த ஆன்மீக பூமி மேலூர். திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார். அப்படியான திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் பிறந்த ஊர் மேலூர் அருகே உள்ள திருவாதவூர்.

விவசாயத்திற்கு பேர் போன மேலூர் கலப்பை தமிழகத்தில் மிகவும் பிரபலம். இதைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் மேலூர் திரு வி. மாணிக்கத் தேவர் இவர் உருவாக்கிய 'போஸ் கலப்பைத் தொழிற்சாலை’, 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் எளிமையான அரசியல்வாதி என்ற பெயரெடுத்த முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கன் அவர்களை நமக்கு தந்த ஊரும் இதே ஊர்தான்.

கக்கன் போன்ற நேர்மையான அமைச்சர்கள் அலங்கரித்த தமிழகம் இன்று ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் செல்வதும், விசாரணையை எதிர்கொள்வதுமாக இருக்கும் அமைச்சர்களால் தனது பொலிவை இழந்து நிற்கிறது. கக்கன், காமராஜர் போன்றவர்கள் வாழ்ந்த பூமி இன்று கமிஷன் அடிப்பவர்களால் நிறைந்திருக்கிறது.

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் பயன்பெற்ற 2,30,312 பேரில் மேலூரைச் சேர்ந்த கவிதா, தமிழகத்தில் வருடம் 6000 ரூபாய் பயனடையும் 46 லட்ச விவசாயிகளில் மேலூர் திருச்சுனையை சேர்ந்த ராசு, தமிழகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தினால் பயன்பெறும் 30 லட்ச பேரில் மேலூர் பள்ளபட்டியைச் சேர்ந்த செல்வி வித்யா, தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழகத்தில் 57 லட்ச புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் பயன்பெற்ற மேலூர் பள்ளபட்டியைச் சேர்ந்த லதா, உஜ்வாலா திட்டம் ஒன்று மற்றும் இரண்டின் கீழ் 37 லட்சம் பயனாளிகளில் ஒருவரான மேலூரைச் சேர்ந்த கங்கா, இவர்கள் அனைவரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முகவரியாக உள்ளனர்.

விவசாயிகளுக்கு உர மானியம் 36,8,676 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஹெக்டேருக்கு ரூ.8909 உர மானியம். 2200 ரூபாய் விலையுள்ள ஒரு மூட்டை யூரியாவுக்கு 1958 ரூபாய் மானியம் வழங்கி, விவசாயிகளுக்கு 242 ரூபாய்க்கு வழங்குகிறது. நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, 2013-14 ஆண்டு ரூ.1310லிருந்து 2022- 23 ஆண்டு ரூ.2183 ஆக, 67 சதவீதம் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நீர்நிலை மேம்பாட்டிற்கு கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு வழங்கிய நிதி 2971 கோடி ரூபாய். பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு 1231 கோடி ரூபாய். விவசாயத்தை மேம்படுத்த, விவசாயம் சார்ந்த தொழில் தொடங்கிட கடந்த 9 ஆண்டுகளில் மத்திய மோடி அரசு வழங்கிய நிதி 1872 கோடி ரூபாய்.

இவை அனைத்தும் மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக தவறான அரசியல் செய்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன்.

கேரள கம்யூனிஸ்ட் அரசு மருத்துவ கழிவுகளை லாரி மூலமாக கொண்டு வந்து தமிழகத்தின் தென்காசியில் கொட்டுகிறார்கள். இதற்கு எதிராக குரல் கொடுத்தார்களா? முல்லை பெரியாறு அணை 142 அடிக்கு உயர்த்த அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படும் கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக இவர் குரல்கொடுத்தாரா? சென்ற ஆண்டு அரசுக்கே தெரியாமல் முல்லை பெரியாறு அணையில் இருந்து திடீரென்று தண்ணீரை திறந்து விட்டு தமிழக கிராமங்களை வெள்ளக்காடாக மாற்ற முயற்சி செய்த போது குரல் கொடுத்தாரா?

இந்த கம்யூனிஸ்ட்கள் ஒரு வினோதமானவர்கள். கன்னியாகுமரி எல்லை வரை ராகுல் புகழ் பாடிவிட்டு, கேரளா போனபின்பு ராகுல் காந்தியைக் கேலி செய்வார்கள். மக்களுக்கு எந்தவித பயனும் இல்லாதவர்கள். கடந்த 18 மாதங்களில் மட்டும் 43 தூய்மை பணியாளர்கள் தமிழகத்தில் இறந்துள்ளார்கள். இதற்கு முழு பொறுப்பு திமுக அரசுதான்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சந்தர்ப்பவாத, ஊழல் கூட்டணியைத் தோற்கடித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும். அதில், தமிழகமும் பெரும் பங்கு வகிக்க வேண்டும்' என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com