அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்வரை ஓய மாட்டோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை ஆகிய இடங்களில் சமீபத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜப்பர் உள்ளிட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனிடையே, இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல. தொழிற்சாலையில் பயன்படுத்தும் மெத்தனாலை பயன்படுத்தி, விற்பனை செய்யப்பட்ட விஷ சாராயம் என்று தமிழக டிஜிபிதெரிவித்தார்.
இந்த நிலையில், விஷ சாராயம் விற்பனையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 20-ம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக தலைவா் அண்ணாமலை அறிவித்திருந்தாா்.
அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அப்போது பேசிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் இன்று 38 இடங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. திமுகவினர் மற்றும் அமைச்சர்கள் பலரும் மிகப் பெரிய ஊழலில் சிக்கியுள்ளனர்.
விரைவில் அமைச்சர்களின் சொத்துப்படியல் வெளியிடுவோம். அதுபோல், கள்ளச்சாராய சாவுகள் உடனடியாக தடுக்கப்படவேண்டும். இல்லையேனில், பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் தமிழக அளவில் வெடிக்கும்.
தமிழகத்திலே டாஸ்மாக் கடைகள் தேவையில்லை. ஆனால், மதுக்கடைகள் மூலம் பல லட்சம் ரூபாய், அல்லஅல்ல பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்று வருகிறது. எனவே, இதற்கு காரணமான, அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அதுவரை ஓயமாட்டோம்' என்றார்.