பா.ஜ.கவின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என திமுக செயற்குழுக்கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசி உள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்தது.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், "அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திட்டம் நிச்சயம் பள்ளிக்கு வராத மாணவர்களை பள்ளி நோக்கி வர வைக்கும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.
இதற்கிடையில், அடுத்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்க இருக்கிறது தமிழக அரசு. இதற்கான விண்ணப்பங்கள் சரிபார்ப்பும் பணி நடந்து வருகிறது. இந்தத் திட்டம் இந்தியாவில் முன்னோடி திட்டமாக பார்க்கப்படுகிறது.பல்வேறு மாநிலங்கள் தமிழக அரசின் திட்டத்தை பார்த்து செயல்படுத்த ஆயத்தமாகி வருகிறது.அதே நேரம் இந்த திட்டத்தில் தவறு நடந்து விடக்கூடாது என்பதில் முதலமைச்சர் கவனமாக இருக்கிறார்.
இந்தத் திட்டம் செயல்முறைக்கு வரும்போது, தி.மு.க ஆட்சிக்கு மிகப்பெரிய நல்ல பெயர் கிடைக்கும். அதைக்கெடுக்கும் விதமாக பாஜகவினர் தவறான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். எனவே இன்று முதல் பா.ஜ.கவினரின் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் 40க்கும் 40 வெற்றி பெற்று முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக தூத்துக்குடி தொகுதியை வெற்றி பெற்று ஆக வேண்டும்".இவ்வாறு அவர் பேசினார்.