தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் ஆதரவோடு விஷ சாராய விற்பனை நடைபெறுவதாகவும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி மீது தி.மு.க தலைமை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம், ’கள்ளச்சாராயத்தை கூலிக்கு விற்பனை செய்பவர்களை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளச்சாராயம் தயாரித்து, விற்பனை செய்பவர்களை கைது செய்யவில்லை.
கள்ளச்சாராய விற்பனையில் திண்டிவனம் தி.மு.க கவுன்சிலர் கணவர் மற்றும் புதுச்சேரி தி.மு.க. பிரமுகரிடம் வேலை செய்பவர் என 2 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர்.
மேலும், திண்டிவனத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி அமைச்சர் மஸ்தானுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, 2 முறை குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளவர்களை அழைத்து அவரின் மனைவிக்கு கவுன்சிலர் பதவி கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பியவர்,
விழுப்புரம் அடுத்துள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் பிரச்சனை தொடர்பாக கடந்த ஒரு மாதமாக பொன்முடி அமைதியாக இருந்தார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரச்னையை திசை திருப்புவதற்காகவும், திட்டமிட்டு கலவரத்தை உருவாக்கவும் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி மீது தி.மு.க தலைமை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்' என தெரிவித்தார்.