”முன்பு இமாச்சல பிரதேசம், டெல்லி மாநகராட்சி , சிம்லா மேயர் தேர்தலில் தோல்வி அடைந்த பா.ஜ.க தற்போது கர்நாடகா தேர்தல் என தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க படுதோல்வி அடையும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில், செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், ”கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வீதி, வீதியாகச் சென்று வாக்கு கேட்டனர். ஆனால், அவர்களை மக்கள் நம்பவில்லை. மாறாக புறக்கணித்துவிட்டனர். இதனால், பா.ஜ.க மிகப் பெரிய தோல்வி அடைந்துள்ளது.
இதை கர்நாடக பா.ஜ.க-வுக்கான தோல்வியாக பார்க்க முடியாது. அகில இந்திய அளவில் பா.ஜ.க-விற்கும், மோடி - அமித்ஷா கூட்டணிக்குமான படுதோல்வி கிடைத்துள்ளதாகவே பார்க்க வேண்டும்
முன்பு, இமாச்சல பிரதேசம், டெல்லி மாநகராட்சி தேர்தல், சிம்லா மேயர் தேர்தல் தற்போது கர்நாடகா தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் பா.ஜ.க தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க படுதோல்வி அடையும்.
குழந்தை திருமணம் செய்த புகாரில் சிதம்பரம் தீட்சிதர்கள் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். அது தவறு என ஆளுநர் கூறுகிறார். இப்படிப்பட்ட ஆளுநர் தமிழகத்திற்கு தேவையில்லை. எனவே, இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்” என்றார்.