மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஆண்டை போல் மழைநீர் தேங்கக்கூடாது என்பதற்காக சென்னை முழுவதும் மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணி தமிழக அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் ஒருநாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்த தமிழக அரசை இந்த நேரத்தில் வன்மையாக கண்டிக்கிறேன். மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் சென்னையில் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்துள்ளது. சாலைகள் தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் முதல் வயதானவர்கள் வரை சேதம் அடைந்த தார் சாலைகளால் அவதியடைந்து வருகின்றனர். மழைநீர் வடிகால் பணிகளால் சென்னையில் எந்த சாலையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு செய்து, அப்பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான வடிகால் கால்வாய்கள், சாலைகள் அமைத்து இனி வருங்காலங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவோம் என வசனங்கள் பேசுவதை விட்டுவிட்டு, ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.